India

121 பேரை பலிகொண்ட ஹத்ராஸ் விபத்து : "சமூக விரோதிகளே காரணம் " - சாமியார் சர்ச்சைக் கருத்து !

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் இந்து மத சத்சங்கம் சார்பில் ஆன்மிக நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. போலே பாபா என்பவர் தலைமையில் மானவ் மங்கள் மிலான் சத்பவன சமாகன் குழு இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்ச்சியில் 2.5 லட்சம் பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் பக்தர்கள் ஒரே பகுதியிலிருந்து வெளியேற முயன்ற நிலையில், அங்கு கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதில் பல நூறுபேர் சிக்கிக்கொண்டனர்.

இந்த நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த நிலையில், , ஏராளமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.வெளியேறும் இடத்தில் போதுமான ஏற்பாடுகள் செய்யப்படாததும், அதிக பக்தர்கள் கூடியதுமே இந்த விபத்துக்கு காரணமாக கூறப்பட்டது.

மாநில பாஜக அரசும், ஒன்றிய பாஜக அரசும் இதற்கு நிவாரணம் வழங்கினாலும், இந்த சம்பவம் அரசின் அலட்சியத்தால் நேர்ந்த கொடூரம் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. மேலும் இந்த நிகழ்ச்சியை நடத்திய போலே பாபாவை கைது செய்யவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இந்த நிலையில், தலைமறைவாக உள்ள போலே பாபா இந்த நிகழ்வு குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், " இந்த விபத்துக்கு சமூக விரோதிகளே காரணம். எனினும் இந்த வலியை தாங்கிக்கொள்ளும் பலத்தை இறைவன் நமக்கு அளிப்பார். அரசின் மீதும் நிர்வாகத்தின் மீதும் தயவு செய்து நம்பிக்கை வைப்போம். இந்த அசம்பாவிதத்தை நிகழ்த்தியவர்கள் யாரும் தப்பிக்க முடியாது என நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.

Also Read: மஹாராஷ்டிரா சட்டமேலவை தேர்தல் : திண்டாட்டத்தில் ஷிண்டே, அஜித் பவார் - எம்.எல்.ஏக்களின் ஆதரவு யாருக்கு ?