India

“எதிர்க்கட்சிகளுக்கு ஜனநாயகம் மறுக்கப்படுகிறது - தாமரை தான் இருக்கிறது, தராசு இல்லை” : திருச்சி சிவா MP!

18வது மக்களவை கூட்டத்தொடர் கடந்த ஜூன் 24ம் தேதி தொடங்கி இன்றோடு முடிந்தது. முதல் இரண்டு நாட்கள் புதிய எம்.பி.க்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மக்களவை மற்றும் மாநிலங்களவையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார்.

இதனையடுத்து குடியரசு தலைவர் உரை மீதான விவாதம் நடைபெற்றது. முன்னதாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் பேசும் போதும், பாஜகவினர் இந்துக்களின் பாதுகாவலர்கள் அல்ல, பாஜக ஆட்சியில் வேலையின்மை அதிகரித்துள்ளது. பிரதமர் மோடி மணிப்பூர் பற்றி பேச மறுக்கிறார் என பாஜக ஆட்சியில் நிகழ்ந்த அவலங்களை பட்டியலிட்டு பேசினார்.

அப்போது ராகுல் காந்தி பேசுகையில் 8 ஒன்றிய அமைச்சர்கள் உள்ளிட்ட பாஜக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து அவையில் கூச்சலிட்டனர். அதன்பின்னர் திமுக கொறடா ஆ.ராஜா பேசினார். ஆ.ராஜா பேசும் போது, ஒன்றிய அரசு தனது கருத்துகளை குடியரசுத் தலைவர், சபாநாயகர் உரை மூலம் திணிக்க முயல்கிறது. பாசிச கொள்கைகளையே ஒன்றிய அரசு கடைபிடிக்கிறது. பாஜக ஆட்சியாளர்களுக்கு அவசரநிலை குறித்து பேச எந்த உரிமை கிடையாது. தமிழ்நாட்டு மக்கள் பாசிசத்துக்கு எதிராக 2வது முறையாக வாக்களித்துள்ளார்கள்.

நீட் தேர்வு மூலம் Majority, Management, Payment என்று மூன்று பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதனால்தான் நீட் தேர்வு முறையை எதிர்க்கிறோம். 8 கோடி மக்களின் பிரதிநிதியாக உள்ள தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்தை ஒன்றிய அரசு கிரப்பில் போட்டுள்ளது.” என தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி பேசினார். அப்போது மோடி பல பொய்யான குற்றச்சாட்டை அவையில் பேசுவதாக எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் காங்கிரஸ் கட்சி மீது அவதூறு கருத்துகளை மோடி பேசியபோது, காங்கிரஸ் கட்சி தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே தலையீட்டு, விளக்கம் கொடுக்க அனுமதி கேட்டார். ஆனால் சபாநாயகர் அனுமதி மறுத்ததால், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அனைவரும் கூண்டோடு வெளிநடப்பு செய்தனர்.

இதனையடுத்து இதுகுறித்து திமுக மாநிலங்களவைக் குழுத் தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”எதிர்க்கட்சித் தலைவர் பேச கூட போதிய வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. பிரதமரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தோம். பிரதமரின் பேச்சுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என கார்கே கோரிக்கை விடுத்தும் அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. நாடாளுமன்றத்திலேயே பொய்யான தகவல்களை பிரதமர் மோடி பேசுகிறார்.

திருச்சி சிவா

எதிர்க்கட்சிகளின் கருத்துகளை கேட்டு, அதற்கு விளக்கம் தரவேண்டிய கடமை ஆளும் கட்சிக்கு உள்ளது. ஆனால் பேசவே அனுதிக்கப்படுவதில்லை. அவர்கள் மட்டும் எதைவேண்டுமானாலும் பேசலாம் என்ற கடந்த கால முறையே கடைபிடிக்கிறார்கள். அவை தலைவர் எதிர்க்கட்சிகளுக்கு பாதுகாப்பு கொடுப்பதில்லை.

பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் அவை தலைவர் இருக்கைக்கு பின்னால், தராசு இருக்கும்; அது இரு தரப்பையும் சமமாக நடத்தப்படுவதற்கான அறிகுறி ஆகும். ஆனால் புதிய நாடாளுமன்ற கட்டத்தில் அவை தலைவர் இருக்கைக்கு பின்னால், தாமரை தான் இருக்கிறது. இது ஒருதரப்பினருக்கு சாதகமான அறிகுறியாகும். அவை தலைவர் இருக்கை என்பது பொதுவானவை என அவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “இந்து ராஷ்டிரத்துக்காகவே பொதுத்துறை அழிக்கப்படுகிறது” - முதல்நாளிலேயே மக்களவையை தெறிக்கவிட்ட ஆ.ராசா MP!