India

ஹத்ராஸ் ஆன்மிக நிகழ்ச்சி சம்பவம் : அதிகரிக்கும் பலி எண்ணிக்கை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் !

உத்தர பிரதேசத்தின் ஹத்ராஸ் பகுதியில் உள்ள புல்ராய் கிராமத்தில் இந்து மத சத்சங்கம் சார்பில் ஆன்மிக நிகழ்ச்சி ஒன்று நேற்று (ஜூலை 2) நடைபெற்றது. போலே பாபா என்பவர் தலைமையில் மானவ் மங்கள் மிலான் சத்பவன சமாகன் குழு இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து இந்த நிகழ்ச்சி முடிந்ததும் பக்தர்கள் ஒரே பகுதியிலிருந்து வெளியேற முயன்ற நிலையில், அங்கு கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதில் பல நூறுபேர் சிக்கிக்கொண்டனர். இந்த நெரிசலில் சிக்கி இதுவரை சுமார் 120-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், ஏராளமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த கோர சம்பவத்துக்கு வெளியேறும் இடத்தில் போதுமான ஏற்பாடுகள் செய்யப்படாததே காரணம் என்று கூறப்படுகிறது. எனினும் இவ்வளவு உயிரிழப்புக்கு மத்தியிலும் மூத்த அதிகாரிகள் யாரும் இந்த இடத்துக்கு நீண்ட மணி நேரமாக வரவே இல்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் டிரக்குகள், டெம்போக்கள் கொண்டு செல்லப்பட்ட வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

அதோடு காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல எந்த வித ஏற்பாடும் செய்யப்படவில்லை என்றும், ஹத்ராஸ் மருத்துவமனையில் போதிய மருத்துவ உபகரணங்களும் மருத்துவ பணியாளர்களும் இல்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த கோர சம்பவத்துக்கு நாடு முழுவதும் இருந்து பாஜக அரசுக்கு கண்டனங்களும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல்களும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு வருமாறு :

"உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலரும் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். இந்த இக்கட்டான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுடன் நாம் நிற்போம்!"

Also Read: நீட் விவாதம் இன்றி ஒத்திவைக்கப்பட்ட மக்களவை! : மோடி அரசின் மற்றொரு புறக்கணிப்பு!