India

ராகுல் காந்தியின் உரை நீக்கம் : முதல் கூட்டத் தொடரிலேயே பயந்து போய் இருக்கும் பா.ஜ.க!

18 ஆவது மக்களவை கூட்டத் தொடர் கடந்த ஜூன் 24 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு நாட்கள் புதிய எம்.பி.க்கள் பதிவயேற்றனர். பின்னர் இருஅவைகள் கூட்டத்தில் குடியரசு தலைவர் உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

நேற்று நடந்த விவாதத்தின் போது எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியையும் ஒன்றிய பா.ஜ.க அரசையும் கடுமையாக விமர்சித்தார். அப்போது, ”இந்து மதக் கடவுளரும் மத குருமார்களும் போதிப்பது அகிம்சையைதான். ஆனால் பா.ஜ.க இம்சையையும் வெறுப்பையும் பொய்களையும் போதிக்கிறது. இந்துக்களுக்கு எதிராக இருக்கும் மோடி, இந்து அல்ல. பாஜகவோ ஆர்எஸ்எஸ்ஸோ இந்துக்களுக்கானவை அல்ல.

கடவுளுடன் நேரடி தொடர்பில் இருப்பதாக பிரதமர்தான் சொன்னார். நான் சொல்லவில்லை. அவர்தான் தொலைக்காட்சியில் தான் பயாலஜிக்கலாக பிறக்கவில்லை எனக் கூறினார். மும்பையில் அதானிக்கு விமான நிலையம் கொடுக்கச் சொல்லி அந்த கடவுள்தான் சொன்னாரா? வேலையின்மை பற்றி கடவுள் எதுவும் சொல்லவில்லையா?

ராமர் பிறந்த இடமென சொல்லி அயோத்தியில் ராமர் கோவிலை கட்டினார்கள். ஆனால் அயோத்தி பாஜகவுக்கு தேர்தலில் என்ன தீர்ப்பை வழங்கியது? ஸ்ரீராமர் என்ன முடிவை அங்கு பாஜகவுக்கு வழங்கினார்” என 1 மணி நேரத்திற்கு மேல் ராகுல் காந்தி உரையாற்றினார்.மேலும், ராகுல் காந்தியின் உரைக்கு ரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட அமைச்சர்கள் பல முறை குறுக்கீடு பேசினர்.

இந்நிலையில் ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, பூபேந்தர் யாதவ், கிரண் ரிஜீஜு, ஆகியோர் சபாநாயகரை சந்தித்து ராகுல் காந்தியின் உரை மீது புகார் அளித்துள்ளனர். இதையடுத்து பிரதமர் மோடி குறித்தும், கடவுகள், ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட ராகுல் பேசிய சில உரைகள் அவைகுறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அர­சி­யல் வெற்­றி­யும் கொள்கை வெற்­றி­யும் : முரசொலி தலையங்கம்!