India

"வன்முறையை வாய்மூடி வேடிக்கை பார்க்கும் பிரதமர் மோடி" : மக்களவையில் மணிப்பூர் எம்.பி கண்டனம்!

18 ஆவது மக்களவை கூட்டத் தொடர் கடந்த ஜூன் 24 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு நாட்கள் புதிய எம்.பி.க்கள் பதிவயேற்றனர். பின்னர் இருஅவைகள் கூட்டத்தில் குடியரசு தலைவர் உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மணிப்பூர் பற்றி குடியரசு தலைவர் உரையில் இடம் பெறாததற்கு அம்மாநில காங்கிரஸ் எம்.பி அங்கோம்சா பிமோல் வேதனை தெரிவித்துள்ளார்.

நேற்று மக்களவையில் பேசிய அங்கோம்சா பிமோல், "மணிப்பூரில் ஏற்பட்டுள்ள வன்முறையால் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர். 200 பேர் உயிரிழந்துள்ளனர். மக்கள் ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டு தங்கள் கிராமங்களைக் காக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். மணிப்பூரில் உள்நாட்டு போர் எழுந்துள்ளது போன்று இருக்கிறது. கடந்த ஒரு வருடமாக நிகழ்ந்து வரும் இந்த வன்முறையை ஒன்றிய அரசு வாய்மூடி வேடிக்கைப் பார்த்து வருகிறது.

இப்போதும் கூட பிரதமர் மோடி மணிப்பூர் பற்றி பேசாமல் அமைதியாக இருக்கிறார். குடியரசு தலைவர் உரையில் கூட மணிப்பூர் வன்முறைபற்றி இடம் பெறவில்லை. இந்த நாட்டிற்காக மணிப்பூர் மக்கள் தங்களது பங்களிப்பை கொடுத்து இருக்கிறார்கள்.

தற்போது மணிப்பூர் நெருக்கடியில் இருக்கும் போது அவர்களை பற்றி ஒன்றிய அரசு கவலைப்படாமல் இருப்பது எங்களை அவமதிப்பது போன்று உள்ளது. எங்கள் வாழ்க்கையை பற்றி சிந்தியுங்கள். பிறகு தேசியவாதம் பற்றி பேசுங்கள்” என தெரிவித்துள்ளார்.

Also Read: ”இந்துவா என்பதை அறிய DNA பரிசோனை வேண்டும்” : பா.ஜ.க அமைச்சர் சர்ச்சை பேச்சு!