India
“புதுச்சேரி பாஜக கூட்டணி அரசில் லஞ்சம் கொடுக்காமல் எதுவும் நடக்காது” - பாஜக MLA-க்கள் புகாரால் அதிர்ச்சி!
புதுச்சேரியில் கடந்த 2021 முதல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. என்.ஆர் காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி ஆட்சியில் முதல்வராக ரங்கசாமி இருந்து வருகிறார். இந்த சூழலில் ஆரம்பத்தில் இருந்தே சுமூகமாக போனதாக வெளியில் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி வந்த இந்த கூட்டணி, நாளடைவில் ஒன்றிய பாஜக, ரீதியாக தனக்கு தொல்லை கொடுப்பதாக அவ்வப்போது ரங்கசாமி குற்றம் சாட்டினார்.
இந்த சமயத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸுக்கு வாய்ப்பு கொடுக்காமல் பாஜக சார்பில், புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதனால் முதல்வர் ரங்கசாமிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், அமைச்சரவையில் இருந்து பாஜக வெளியேற போவதாக சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது.
இந்த தகவலை தொடர்ந்து பிரதமர் மோடி பதவியேற்பு விழாவையும் முதலமைச்சர் ரங்கசாமி புறக்கணித்தார். இப்படியாக புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது அந்த கூட்டணி அரசுக்கு லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் நடைபெறவில்லை என்று பாஜகவினர் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது புதுச்சேரியில் கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் நடைபெறுவதில்லை என்றும், இதனை மக்கள் உணர்ந்துள்ளதாகவும், முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் பாஜக அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணகுமார் உள்ளிட்டோர் 10 க்கும் மேற்பட்ட புரோக்கர்களை வைத்துகொண்டு ஊழல் செய்து வருவதாகவும் பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மேலும் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த அரசு மக்கள் நலத்திட்டங்கள் எதையும் செய்யவில்லை என்றும், புதுச்சேரியில் தலைவிரித்தாடும் ஊழலால்தான் மக்களவை தேர்தலில் பாஜக தோல்வியடைந்ததாக குற்றம்சாட்டியும், அமைச்சரவையை உடனே மாற்ற வேண்டும் என வலியுறுத்தி பாஜக உறுப்பினர்கள் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் புகார் அளித்துள்ளனர்.
பாஜக எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம் தலைமையில், சக பாஜக எம்.எல்.ஏ-க்கள் ஜான்குமார், ரிச்சர்ட், வெங்கடேசன், அசோக்பாபு மற்றும் பாஜக ஆதரவு சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்கள் சிவசங்கர், அங்காளன் உள்ளிட்ட 7 பேர் கொண்ட உறுப்பினர்க சி.பி.ராதாகிருஷ்ணனை ஆளுநர் மாளிகையில் சந்தித்து புகார் அளித்துள்ளனர்.
மேலும் இது தொடர்பாக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வரும் திங்கட்கிழமை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து முறையிட உள்ளதாகவும் கூறப்படுகிறது. பாஜக சட்டமன்ற உறுப்பினர்களே புதுச்சேரியில் மக்கள் நலத்திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை என்றும், அனைத்திலும் ஊழல் நடைபெறுவதாகவும் முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் பாஜக அமைச்சர்களுக்கு எதிராக போர்க்கொடி தாக்கியுள்ள சம்பவம் புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
-
“மூன்று வேளாண் சட்டங்களால் என்ன தீமை?” என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி! : முரசொலி கண்டனம்!
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!