India

தேர்வு நடைபெறவிருந்த 12 மணி நேரத்துக்கு முன் வெளியான அறிவிப்பு: தொடர் முறைகேடுகளால் நீட் PG தேர்வு ரத்து!

நடப்பு ஆண்டில் நடைபெற்ற இளநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வில் இதுவரை இல்லாத அளவு மோசடி நிகழ்ந்துள்ளது. ஆள் மாறாட்டம், தேர்வு வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் என பல வழிகளில் முறைகேடு நடந்துள்ளது. குறிப்பாக இதுபோன்ற சம்பவங்கள், பாஜக மற்றும் அதன் கூட்டணி ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான், மகாராஷ்டிரா, பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் நடந்துள்ளது.

அதோடு தேர்வுக்கு முதல் நாள் இரவு, நீட் வினாத்தாள் கிடைத்ததாக இதன் மூலம் ஏராளமானோர் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் புகார் எழுந்தது. இந்த வழக்கில் 20க்கும் அதிகமானோர் கைதாகினர். இந்த நிலையில், தேர்வு நடைபெறவிருந்த 12 மணி நேரத்துக்கு முன்னர் நீட் முதுநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இன்று நாடு முழுவதும் நீட் முதுநிலை தேர்வு நடைபெறவிருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று இரவு, அதாவது தேர்வுக்கு 12 மணி நேரத்துக்கு முன்னதாக இந்த தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வுகள் வாரியம் அறிவித்தது.

இந்த தேர்வுகள் பல்வேறு மையங்களில் நடைபெறும் நிலையில், ஏராளமான மாணவர்கள் தேர்வுக்காக முன்னரே தேர்வு மையங்களை நோக்கி பயணத்தில் இருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியானதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இளநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வில் ஏராளமான மோசடி புகார்கள் வெளிவந்த நிலையில், முதுநிலை நீட் தேர்விலும் அந்த முறைகேடுகள் நடைபெற்றிருக்கலாம் என்பதால் இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தேசிய தேர்வுகள் வாரியத்தின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: நீட் கேள்வித்தாள் கசிவு வழக்கு : முக்கிய குற்றவாளி கைது... ஏராளமான தேர்வுகளில் மோசடி செய்தது அம்பலம் !