India

NEET PG தேர்வு ரத்து : “ஒன்றிய அரசின் சர்வாதிகார போக்கை காட்டுகிறது” - மருத்துவர்கள் சங்கம் கண்டனம் !

நடப்பு ஆண்டில் நடைபெற்ற இளநிலை (UG) படிப்புகளுக்கான நீட் தேர்வில் இதுவரை இல்லாத அளவில் ஆள் மாறாட்டம், தேர்வு வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் என பல வழிகளில் மோசடி நடந்துள்ளது. இவையனைத்தும் பாஜக மற்றும் அதன் கூட்டணி ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான், மகாராஷ்டிரா, பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் நடந்துள்ளது.

இந்த வழக்கில் இதுவரை மாணவர்கள், பெற்றோர்கள், அரசு அலுவலர்கள் என பலரும் சிக்கி கைது செய்யப்பட்டுள்ளனர். நாள்தோறும் நடைபெறும் விசாரணையில் திடுக் தகவல்கள் வெளியாகி வந்த வண்ணமாக இருக்கிறது. இந்த நிகழ்வு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி பலரும் வலியுறுத்தி வந்த போதிலும், ரத்து செய்யப்படாது என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் பூதகரமாகியுள்ள நிலையில், நீட் முதுநிலை (PG) தேர்வு நடைபெறுவதற்கு வெறும் 12 மணி நேரத்துக்கு முன்பாக தேர்வு ரத்து செய்யப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது பலர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பி வருகிறது. அந்த வகையில் மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நீட் PG நுழைவு தேர்வு ரத்து, நீட் தேர்வு முறைகேடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது, "இன்று நாடு முழுவதும் நடைபெற‌ இருந்த முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வினை ஒன்றிய அரசு இரவோடு இரவாக ரத்து செய்துள்ளது. இது அதன் சர்வாதிகார போக்கை காட்டுகிறது. மேலும் பல்வேறு மாணவர்கள் தங்கள் மையத்தின் அருகில் சென்று தனியாக அறை எடுத்துள்ளனர். எனவே மாணவர்கள் பொருட் செலவுகள் ஏராளமாக ஏற்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக மாணவர்கள் தங்களை தயார் படித்தி இருக்கிறார்கள். இதன்மூலம் ஒன்றிய அரசு அதற்கான செலவுகளை ஏற்க வேண்டும். அதேபோன்று நீட் இளங்கலை மருத்துவ‌ தேர்விலும் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது என்பதை ஒன்றிய அமைச்சர் ஒப்புக்கொண்டுள்ளார். எனவே ஒன்றிய அரசு பொறுப்பேற்று அவரை பதவியில் இருந்து விலக்க வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக மொழிவாரி மாநிலங்களை இன்று வரை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால்தான் ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே இனம், ஒரே தேர்வு என கொண்டு வருகிறார்கள். மாநில அரசு கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவப் படிப்பு இடங்களையும் கைப்பற்ற ஒன்றிய அரசு சூழ்ச்சி செய்து இந்த தேர்வை நடத்துகிறது. மருத்துவ படிப்பிற்கு மாநில அரசே நுழைத்தேர்வு நடத்தி சேர்க்கை நடைபெற வேண்டும். நீட் தேர்வுக்கு எதிரான தமிழகத்தின் நிலைப்பாடிற்கு என்றும் எங்கள் மருத்துவ சங்கம் துணை நிற்கும்.

தேசிய தேர்வு முகமையினால் திடீரென தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது. நேர்மையான முறையில் வெளிப்படைத்ததன்மையுடன் மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நடைபெற வேண்டும். அரசு மருத்துவ இடங்களில் மட்டுமே 69% இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. ஆனால் நிர்வாக இட ஒதுக்கீட்டில் உள்ள இடங்களில் 69% இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை. எனவே ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்.

தற்பொழுது ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள சட்டத்தின் மூலம் சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். போட்டி தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்யும் பயிற்சி மையங்களை ஒருங்கிணைத்து அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழ்நாடு அரசின் கீழ் வரும் இளங்கலை, முதுகலை மற்றும் சிறப்பு மருத்துவர் மருத்துவ படிப்புகளுக்கு தமிழ்நாடு அரசு தான் தேர்வு முறைகளை நிர்ணயித்து மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்" என்றார்.

Also Read: நீட் PG தேர்வு ரத்து: திட்டமிடல் இல்லாமல் மாணவர்களை அலைக்கழிக்கும் ஒன்றிய அரசு- அமைச்சர் மா.சுப்பிரமணியன்