India

நீட் வினாத்தாள் கசிவு : பீகார் அமைச்சருக்கும் தொடர்பு ? - கைதான மாணவன் வாக்குமூலத்தால் பரபரப்பு !

நடப்பு ஆண்டில் நடைபெற்ற நீட் தேர்வில் இதுவரை இல்லாத அளவு மோசடி நிகழ்ந்துள்ளது. ஆள் மாறாட்டம், தேர்வு வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் என பல வழிகளில் முறைகேடு நடந்துள்ளது. குறிப்பாக இதுபோன்ற சம்பவங்கள், பாஜக மற்றும் அதன் கூட்டணி ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான், மகாராஷ்டிரா, பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் நடந்துள்ளது.

பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட பெற்றோர்கள், மாணவர்கள், தேர்வு நடத்தும் அதிகாரிகள் என 30-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். நாடு முழுவதும் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் எந்த ஆண்டும் இல்லாத அளவில் இந்த ஆண்டு 67 மாணவர்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்ததாக அறிவிக்கப்பட்டது.

அதே நேரம் நீட் தேர்வில் முதலிடம் பிடித்த 67 பேரில் 8 பேர் ஹரியானாவில் உள்ள ஒரேமையத்தில் தேர்வு எழுதியவர்கள் என்றும், அவர்களது பதிவு எண் ஒரே வரிசையில் தொடங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்து மறு தேர்வு நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வலுத்து வந்த நிலையில், போராட்டமும் வெடித்தது.

இதையடுத்து இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1,563 மாணவர்களுக்கும் ஜூன் 23-ம் தேதி மறு தேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. தொடர்ந்து நடைபெற்று வரும் விசாரணையில் ரூ.32 லட்சம் லஞ்சம் பெற்று வினாத்தாளை கசியவிட்டதாக சிக்கந்தர் என்ற இடைத்தரகர் ஒருவர் வாக்குமூலம் அளித்ததோடு, ரூ.1.8 கோடிக்கான காசோலையையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தற்போது நீட் தேர்வுக்கு முதல் நாள் இரவு, நீட் வினாத்தாள் கிடைத்ததாகவும், நீட் மோசடியில் ஈடுபட்ட மாணவர்கள் தங்குவதற்கு பீகார் மாநில அமைச்சர் உதவியதாகவும் பீகாரில் கைதான மாணவன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மாணவர்கள், பெற்றோர்கள், அதிகாரிகள் என சுமார் 13 பேரை கைது செய்து பீகார் மாநில போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது கைது செய்யப்பட்ட மாணவர்களில் ஒருவரான அனுராக் யாதவ் என்பவரிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது.

அதாவது நீட் தேர்வுக்கு முதல் நாள் பாட்னா விமான நிலையம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை துறைக்கான விடுதியில் தனது தாயாருடன் தங்கியுள்ளார். அங்கு தங்குவதற்கு அமைச்சர் ஒருவர் கடிதம் கொடுத்துள்ளார். அப்போது அந்த விடுதிக்கு வந்த சிலர் நீட் கேள்வித்தாள்களை வழங்கியுள்ளனர். அரசு பொறியாளரான மாணவரின் உறவினர் சிக்கந்தர் என்பவரும் அங்கு சென்றுள்ளார்.

அவரும் சிலர் மூலம் கேள்வித்தாள் தனது உறவினருக்கு கிடைத்ததை ஒப்புக் கொண்டுள்ளார். தனது உறவினருடன் மேலும் 3 மாணவர்களையும் அந்த விடுதியில் தங்க வைத்ததாகவும் கைது செய்யப்பட்டவர் தெரிவித்துள்ளார். மாணவர்கள் விடுதியில் தங்குவதற்கு சிபாரிசு கடிதம் கொடுத்ததாக கூறப்படும் அமைச்சரின் பெயரை போலீசார் வெளியிடவில்லை. எனினும் தொடர்ந்து அடுத்தடுத்து பல திடுக் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: நீட் முறைகேடு: “குற்றம் செய்தவர்களை பாதுகாக்க முயற்சிக்கிறீர்களா?” -ஒன்றிய அமைச்சருக்கு வில்சன் MP கேள்வி