India

நீட் முறைகேடு வழக்கு : ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவு - உச்சநீதிமன்றம் தெரிவித்தது என்ன ?

நடப்பு ஆண்டில் நடைபெற்ற நீட் தேர்வில் இதுவரை இல்லாத அளவு மோசடி நிகழ்ந்துள்ளது. ஆள் மாறாட்டம், தேர்வு வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் என பல வழிகளில் முறைகேடு நடந்துள்ளது. குறிப்பாக இதுபோன்ற சம்பவங்கள், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த முறைகேடு சம்பவங்கள் நடந்துள்ளது.

பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட பெற்றோர்கள், மாணவர்கள், தேர்வு நடத்தும் அதிகாரிகள் என 30-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். நாடு முழுவதும் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

மேலும் எந்த ஆண்டும் இல்லாத அளவில் இந்த ஆண்டு 67 மாணவர்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்ததாக அறிவிக்கப்பட்டது. அதே நேரம் நீட் தேர்வில் முதலிடம் பிடித்த 67 பேரில் 8 பேர் ஹரியானாவில் உள்ள ஒரேமையத்தில் தேர்வு எழுதியவர்கள் என்றும், அவர்களது பதிவு எண் ஒரே வரிசையில் தொடங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்து மறு தேர்வு நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வலுத்து வந்த நிலையில், போராட்டமும் வெடித்தது. இதையடுத்து இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1,563 மாணவர்களுக்கும் ஜூன் 23-ம் தேதி மறு தேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

தொடர்ந்து நடைபெற்று வரும் விசாரணையில் நீட் தேர்வுக்கு முந்தைய நாள் ரூ.32 லட்சம் லஞ்சம் பெற்று வினாத்தாளை கசியவிட்டதாக இடைத்தரகர் ஒருவர் வாக்குமூலம் அளித்ததோடு, ரூ.1.8 கோடிக்கான காசோலையையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இப்படி தொடர் விசாரணையில் அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், சுமார் 2000-க்கும் மேற்பட்ட மாணவர்களின் பெற்றோர் நீதிமன்றத்தில் நீட் முறைகேடு தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த சூழலில் நிதின் விஜய் என்பவர் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று நீதிபதிகள் விக்ரம்நாத், எஸ்.வி.என்.பாட்டி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இதனை விசாரித்த நீதிபதிகள், நீட் தேர்வு விவகாரத்தில் தவறு நடந்திருந்தால், அதனை தேசிய தேர்வு முகமை ஒப்புக்கொண்டு 2 வாரத்தில் பதில் அளிக்க தேசிய தேர்வு முகமைக்கும், ஒன்றிய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பி உதார்விட்டுள்ளனர்.

இது தொடர்பாக நீதிபதிகள் தெரிவித்ததாவது, "நீட் தேர்வு விவகாரத்தில் தவறு நடந்திருந்தால், அதனை தேசிய தேர்வு முகமை ஒப்புக்கொள்ள வேண்டும். மருத்துவம் படிக்கும் மாணவர்கள் தவறு இழைப்பது சமூகத்துக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியவை. 0.1% தவறு நடந்திருந்தாலும் அதனை முழுமையாக விசாரிக்க வேண்டும். ஒரு நபர் தவறு அழைத்தாலும் அது ஒட்டு மொத்த சிஸ்டத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

நீட் முறைகேடு தொடர்பாக இதுவரை நடைபெற்ற விசாரணை விபரங்கள் என்ன என்பதை அடுத்த விசாரணையின் போது நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். நீட் தேர்வுக்காக மாணவர்கள் மேற்கொள்ளும் கடின உழைப்பை புரிந்து கொண்டுள்ளோம்.

மோசடி செய்த ஒருவர் மருத்துவராக மாறுவதை கற்பனை செய்து பாருங்கள். அத்தகைய நபர் சமூகத்திற்கும் அமைப்புக்கும் எவ்வளவு தீங்கு விளைவிப்பார். நீட் தேர்வில் தேர்ச்சி பெற குழந்தைகள் கடினமாக படிக்கின்றனர். அதை யோசியுங்கள்

விடுமுறை காலம் என்பதால் கூடுதல் எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் தேசிய தேர்வு முகமைக்கும், ஒன்றிய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பி, 2 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும். தேசிய தேர்வு முகமையிடமிறுந்து உரிய நேரத்தில் உரிய நடவடிக்கையை எதிர்பார்க்கிறோம்." என்று கூறி, விசாரணையை வரும் ஜூலை 8-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளனர்.

Also Read: உயர்கல்விக்கான தடையை நீக்கும் புதுமைப் பெண், தமிழ் புதல்வன் திட்டங்கள்... - முரசொலி புகழாரம் !