India
NCERT பாட புத்தகத்தில் பாபர் மசூதி பெயர் நீக்கம்... வரலாறை மறைக்க பார்க்கும் ஒன்றிய பாஜக அரசு !
கடந்த 1992-ம் ஆண்டு இந்துத்துவ கும்பல் உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் மசூதி இருப்பதாக கூறி அங்கிருந்த பாபர் மசூதியை இடித்து தரைமட்டமாக்கியது. இதனால் ஏற்பட்ட கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
அதன்பின்னர் பாபர் மசூதி இருந்த இடம் யாருக்கு சொந்தமானது என்பது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீண்ட நாள் விசாரணையில் இருந்து வந்தது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி நில வழக்கில் நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி அளித்து உத்தரவிட்டது.
இதையடுத்து பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் இராமர் கோயில் கட்டப்பட்டு, அதனை பிரதமர் மோடி கடந்த ஜனவரி 22-ம் தேதி திறந்து வைத்தார். இந்த இராமர் கோயில் திறப்பானது தேர்தலை மனதில் வைத்தே இருந்தது. பாஜகவின் தேர்தல் பிரசாரத்தில் கூட இராமர் கோயில் குறித்தும், இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பையும் விதைத்து மோடி உள்ளிட்ட பாஜகவினர் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.
எனினும் இந்த தேர்தலில் இராமரே பாஜகவை கைவிட்டதற்கு சான்றாக, பல்வேறு இடங்களில் பாஜகவினர் தோல்வியை தழுவியது. தற்போது பாஜக தனிப்பெரும்பான்மையை இழந்துள்ள நிலையில், கூட்டணி கட்சிகளின் உதவியோடு ஆட்சியை பிடித்துள்ளது. இந்த சூழலில் பாஜக ஆட்சிக்கு வந்த ஒரு வாரத்திலேயே தனது வேலையை காட்ட தொடங்கியுள்ளது.
NCERT என்று கூறப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு, 12-ம் வகுப்பு பாட புத்தகத்தில் இருந்து பாபர் மசூதி என்ற பெயரை நீக்கி, மூன்று குவிமான கட்டிடம் என்று குறிப்பிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 12 ஆம் வகுப்புக்கான புதிய அரசியல் அறிவியல் பாட புத்தகம் கடந்த வாரம் வெளியாகியது.
இந்த சூழலில் முந்தைய பாடத்திட்டத்தில் அயோத்தியா குறித்த பாடப்பகுதி நான்கு பக்கங்களில் இருந்த நிலையில், தற்போது அது இரண்டு பக்கங்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதில் பாபர் மசூதி என்ற பெயரை வெளிப்படையாக குறிப்பிடாமல், அதற்கு பதிலாக மூன்று குவிமான கட்டிடம் ( Three Domed Structure) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கடந்த ஆண்டு அந்த புத்தகத்தில் பாபர் மசூதி, 11-ம் நூற்றாண்டில் முகலாய பேரரசர் பாபர் காலத்தில் கட்டப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அது மாற்றப்பட்டு மூன்று குவிமான கட்டிடம் என்றும், 1528 ஆம் ஆண்டு ராமர் பிறந்த இடத்தில் இந்த கட்டிடம் கட்டப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. அதோடு முந்தைய பாட புத்தகத்தில் இடம் பெற்றிருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்ட செய்திகளும் தற்போது நீக்கப்பட்டுள்ளன.
புதிய புத்தகத்தில் பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இடம்பெற்றுள்ளது. மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பு அனைத்து சமூகத்தால் கொண்டாடப்பட்டது என்றும் கருத்தொற்றுமையை கட்டி எழுதியதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டு இந்த தீர்ப்பு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்றிய பாஜக அரசின் இந்த செயல் தற்போது பலர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.
Also Read
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!