India
சிறுமி பாலியல் அத்துமீறல் : “சாட்சியங்களை கலைக்க முயற்சிக்க கூடாது” -எடியூரப்பாவுக்கு நீதிமன்றம் உத்தரவு!
தென்மாநிலங்களில் பாஜக வலுவாக இருக்கும் ஒரே மாநிலமாக கர்நாடகா இருந்து வருகிறது. இங்கு பாஜகவை வளர்த்ததில் எடியூரப்பாவுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. அங்கு பாஜக சார்பில் 4 முறை முதலமைச்சராக எடியூரப்பா இருந்துள்ளார். இதனிடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் எடியூரப்பாவை பாஜக மேலிடம் ஒதுக்கி தள்ளியது.
இதனால் தனி கட்சி ஆரம்பித்த அவர், பின்னர் தனது கட்சியை பாஜகவில் இணைத்தார். இதன் காரணமாக பாஜகவில் அவருக்கு மீண்டும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. தற்போது எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா கர்நாடகா மாநில பாஜக தலைவராக இருப்பதோடு, அவர் தற்போது மீண்டும் எம்.பியாக உள்ளார்.
இந்த சூழலில், 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் கடந்த மார்ச் மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதாவது கடந்த பிப்ரவரி 2ம் தேதி சிறுமி ஒருவரின் பெற்றோர் ஒரு உதவியை கேட்டு பெங்களூரின் சதாசிவநகரில் உள்ள எடியூரப்பாவின் இல்லத்துக்கு சென்றுள்ளனர்.
அப்போது சிறுமியை தனி அறைக்குள் அழைத்துச்சென்ற எடியூரப்பா, அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். ஆரம்பத்தில் இதுகுறித்து புகார் தெரிவிக்க தயங்கிய பாதிக்கப்பட்ட குடும்பம், பின்னர் கடந்த மார்ச் மாதம் சதாசிவ நகர் காவல்நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தார். இதையடுத்து எடியூரப்பா மீது போக்சோ உள்பட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இந்த வழக்கு CID-க்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்த சூழலில் எடியூரப்பா கடந்த ஏப்ரல் 12-ம் தேதி விசாரணைக்கு ஆஜரான நிலையில், மீண்டும் ஜூன் 12-ம் தேதி மீண்டும் நேரில் ஆஜராக வேண்டும் என்று போலீசார் நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், தான் டெல்லியில் இருப்பதால் ஜூன் 17-ம் தேதி ஆஜராகுவேன் என்று எடியூரப்பா தனது வழக்கறிஞர் மூலம் பதிலளித்தார்.
இதனால் எடியூரப்பா மீது தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், புகார் கொடுத்து 4 மாதங்கள் ஆகும் நிலையில் குற்றவாளியை கைது செய்யவில்லை என்றும், புகார் கொடுத்த தனது தாயும் உயிரிழந்துவிட்டதாகவும், தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த சூழலில் பாஜக மூத்த தலைவரான எடியூரப்பாவுக்கு ஜாமீனில் வெளியே வர முடியாதபடி, பிடி வாரண்ட் பிறப்பித்து நேற்று (ஜூன் 13) உத்தரவிட்டது பெங்களூரு போக்ஸோ நீதிமன்றம். மேலும் தேவைப்பட்டால் அவரை கைது செய்ய நேரிடும் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரன் தெரிவித்திருந்தார். இதையடுத்து இந்த பிடிவாரண்டை ரத்து செய்ய வேண்டும் என்று எடியூரப்பா தரப்பில் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், எடியூரப்பாவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்ட்டை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது கர்நாடக உயர்நீதிமன்றம். மேலும் ஜூன் 17-ம் தேதி எடியூரப்பா காவல்துறையின் முன்பு ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், சாட்சியங்களை கலைக்க முயற்சி செய்ய கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!