India

”நீட் ஊழலை மூடி மறைக்கும் மோடி அரசு” : மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு!

மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என ஒன்றிய பா.ஜ.க அரசு அறிவித்தது முதல் மருத்துவப் படிப்புக் கனவுகள் தகர்ந்துபோய்த் தவித்து வருகிறார்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள். மேலும் நீட் தேர்வால் மாணவர்களின் தற்கொலை சம்பவங்களும் நடந்து வருகிறது.

அதேபோல் நீட் தேர்வு தொடங்கியது முதலே ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு மோசடிகள் நடந்து வருகிறது. அண்மையில் வெளியான நீட் தேர்வு முடிவுகளில் கூட குளறுபடிகள் நடந்துள்ளது.

குறிப்பாக 67 மாணவர்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் தேசிய தேர்வு முகமை கருணை மதிப்பெண் வழங்கியதும் நீட் குளறுபடிகளை உறுதிபடுத்தியுள்ளது.

இதையடுத்து மாணவர்கள் பலர் உச்சநீதிமன்றத்தில் அண்மையில் வெளியாள நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் என வழக்கு தொடுத்தனர். பின்னர் கருணை மதிப்பெண் பெற்ற 1,563 பேருக்கும் மறுதேர்வு ஜூன் 23-ம் தேதி நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் 30-ம் தேதியும் வெளியாகும் என்று தேசிய தேர்வு முகமை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 24 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வில் எந்த குளறுபடிகளும் இல்லை என்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, நீட் ஊழலை மூடி மறைக்க மோடி அரசு முயற்சி செய்வதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”நீட் ஊழலை மூடி மறைக்க மோடி அரசு முயற்சிக்கிறது. மோடி அரசு NTA-ஐ தவறாகப் பயன்படுத்தி, மதிப்பெண்கள் மற்றும் தரவரிசைகளை பெருமளவில் மோசடி செய்துள்ளது. இதன் காரணமாக ஒதுக்கப்பட்ட இடங்களுக்கான கட்-ஆஃப் அதிகரித்துள்ளது. 24 லட்சம் இளைஞர்களின் ஆசைகளை மோடி அரசு நசுக்கியுள்ளது.

மோடி அரசின் கூற்றுப்படி, நீட் தேர்வில் எந்தத் தாள்களும் கசியவில்லை என்றால், பீகாரில்13 பேர் கைது செய்யப்பட்டது ஏன்?. பாட்னா காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOU) கல்வி மாஃபியாவுக்கு ரூ.30 முதல் ரூ.50 லட்சம் வரை செலுத்தியதை அம்பலப்படுத்தியுள்ளது.

குஜராத் கோத்ராவில் பயிற்சி மையம் நடத்தும் நபர், ஆசிரியர் மற்றும் மற்றொரு நபர் உட்பட 3 பேர் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும், 12 கோடி ரூபாய்க்கு மேல் பணப்பரிவர்த்தனை நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இத்தகைய மோசடியை நடக்கவே இல்லை என்று கூறுவதன் மூலம் மோடி அரசு நாட்டு மக்களை முட்டாளாக்க முயற்சிக்கிறதா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

Also Read: நீட் முறைகேடு வழக்கு : கருணை மதிப்பெண் ரத்து... 1,563 பேருக்கும் மறுதேர்வு அறிவிப்பு !