India

சிறுமி பாலியல் வழக்கு : “எடியூரப்பாவிற்கு மட்டும் ஏன் விலக்கு?” - சாகேத் கோகலே MP கேள்வி !

பாஜகவின் மூத்த மற்றும் முக்கிய தலைவர்களில் ஒருவர்தான் எடியூரப்பா (81). கர்நாடகாவை சேர்ந்த இவர், அம்மாநில முதலமைச்சராக 4 முறை பதவி வகித்துள்ளார். இதனிடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் எடியூரப்பாவை பாஜக மேலிடம் ஒதுக்கிய காரணத்தினால், தனிக்கட்சி ஆரம்பித்த இவர், சில ஆண்டுகளுக்கு பிறகு அதையும் பாஜகவுடன் இணைத்துக்கொண்டார்.

தற்போது வரை கர்நாடகாவில் முக்கிய பாஜக தலைவராக விளங்கும் இவர் மீது, பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் உதவி கேட்டு சென்ற 17 வயது சிறுமியை, தனி அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் எடியூரப்பா. இதையடுத்து இதுகுறித்து மார்ச் மாதம், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், போலீசில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் அவர் மீது போக்ஸோ உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதோடு, இந்த வழக்கு CID-க்கும் மாற்றப்பட்டது. இதனிடையே இந்த வழக்கு தொடர்பாக போலீசார் முன் நேரில் ஒரு முறை ஆஜரான எடியூரப்பா, ஜூன் 12-ம் தேதி ஆஜராகவில்லை. தான் டெல்லியில் இருப்பதால் ஜூன் 17-ம் தேதி ஆஜராக முடியும் என்று தனது வழக்கறிஞர் மூலம் தெரிவித்தார்.

எடியூரப்பா மீது புகார் கொடுத்து 4 மாதங்கள் ஆகும் நிலையில், குற்றம்சாட்டப்பட்ட எடியூரப்பாவிடம் விசாரணை மேற்கொள்ளவில்லை என்றும், அவர் கைது செய்யப்படவில்லை என்றும், தக்க நடவடிக்கை எடுக்க வேண்டியும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரர் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த சூழலில் எடியூரப்பா மீது பிடி வாரண்ட் பிறப்பித்து நேற்று (ஜூன் 13) போக்ஸோ நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தன் மீது போடப்பட்ட பிடி வாரண்ட்டை ரத்து செய்ய கோரியும், ஜாமீன் வழங்ககோரியும் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில் எடியூரப்பா கைது செய்யப்பட வேண்டிய அவசியம் என்ன? என்று நீதிபதி கேள்வியெழுப்பியுள்ளது கண்டனங்களை எழுப்பியுள்ளது. எடியூரப்பா தொடர்ந்த வழக்கு இன்று கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கிருஷ்ணா திக்சித் (Krishna Dixit) விசாரணைக்கு வந்தது. அப்போது "எடியூரப்பாவை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன?" என்று நீதிபதி கேள்வியெழுப்பினார்.

ஜூன் 11 எடியூரப்பாவை ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பிய பின்னரே அவர், டெல்லி சென்றுவிட்டதாக அரசு தரப்பு வாதம் செய்த அரசு தரப்பு வழக்கறிஞரிடம், அவரது வாதத்தை ஏற்க மறுத்தார் நீதிபதி. மேலும் "அவர் டாம், டிக், அல்லது ஹார்ரி (Tom, Dick or Harry-சாதாரண மனிதர்) போல் இல்லை. அவர் ஒரு முன்னாள் முதல்வர். அவர் நாட்டை விட்டு ஓடிவிடுவார் என்பதுதான் வழக்கா? பெங்களூரூவில் இருந்து டெல்லிக்கு சென்று அவரால் என்ன செய்ய முடியும்?" என்று கேள்விகளை எழுப்பினார்.

தொடர்ந்து வயதில் மூத்த மற்றும் முன்னாள் முதல்வரை இப்படி உடனடியாக கைது செய்து காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ளவும் அவரது உடல்நிலையை காரணம் கட்டியும் உத்தரவிட முடியாது என்றும், இந்த வழக்கை ஒத்திவைத்தும் நீதிபதி தீர்ப்பளித்தார்.

அதோடு இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவர் மீதான பிடிவாரண்டை ரத்து செய்ததோடு ஜூன் 17-ம் தேதி எடியூரப்பா காவல்துறையின் முன்பு ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், சாட்சியங்களை கலைக்க முயற்சி செய்ய கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் நீதிபதியின் கருத்துக்கு தற்போது கண்டனங்கள் குவிந்து வருகிறது. இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாகேத் கோகலே தனது சமூக வலைத்தள பக்கத்தில், "ஒரு சாதாரண மனிதன் கைது செய்யப்படலாம், ஆட்சியில் இருக்கும் முதல்வர்கள் கைது செய்யப்படலாம். ஆனால், பா.ஜ.க.வை சேர்ந்த முன்னாள் முதல்வர் கைது செய்யப்பட கூடாதா? எடியூரப்பாவிற்கு மட்டும் ஏன் விலக்கு?" என்று குறிப்பிட்டு கேள்வியெழுப்பியுள்ளார்.

முன்னதாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதமைச்சராக இருந்தபோது ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டார். இருவரும் தற்போது ஆதாரமில்லாமல் குற்றம் நிரூபணம் ஆகாமல், சிறையில் இருக்கும் நிலையில், சிறுமி பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள எடியூரப்பா கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.