India
வாரணாசியில் கடும் சேதாரத்தை சந்தித்த மோடி - 5 சட்டமன்ற தொகுதிகளிலும் செல்வாக்கு கடும் சரிவு!
தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தயவோடு 293 இடங்களுடன் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் மோடி அக்கூட்டணியின் நாடாளுமன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
இதை ஏற்றுக் கொண்ட திரவுபதி முர்மு ஆட்சி அமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்த நிலையில், ஞாயிறன்று இரவு 7 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மாலத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு, நேபாள பிரதமர் புஷ்ப கமால் தகால், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத், செஷல்ஸ் ஜனாதிபதி வேவல் ராம்கலவன், பூடான் பிரதமர் ஷெரீன் உள்ளிட்ட தலைவர்க்ள பங்கேற்றனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் உள்ளிட்ட தலைவர்களும், இக்கூட் டணியின் அழைப்பின் பேரில் பல்வேறு அரசியல், கலை உலகத்தினரும் பங்கேற்றனர்.
சரியாக இரவு 7:15 மணிக்கு 3ஆவது முறையாக பிரதமராக பதவியேற்ற மோடிக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். தொடர்ந்து பாஜகவைச் சேர்ந்த ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்காரி, ஜே.பி.நட்டா, சிவராஜ் சிங் சவுகான், நிர்மலா சீத்தாராமன், எஸ்.ஜெய்சங்கர், மனோகர்லால் கட்டார் ஆகியோர் பதவியேற்றனர். இவர்களைத் தொடர்ந்து கூட்டணிக் கட்சிகளில் முதல் நபராக எச்.டி.குமாரசாமிக்கு முதல் இடம் ஒதுக்கப்பட்டு, 9வது அமைச்சராக அவர் பதவியேற்றார். அவரைத்தொடர்ந்து பியூஸ்கோயல், தர்மேந்திர பிரதான் ஆகிய பாஜக அமைச்சர்களும் அவர்களைத் தொடர்ந்து, கூட்டணிக் கட்சித் தலைவர்களில் ஒருவரான ஜிதன்ராம் மஞ்சி உள்ளிட்டோரும் பதவியேற்றனர்.
மேலும் கிஞ்சம்பு ராம்மோகன் நாயுடு, அஷ்வனி வைஷ்ணவ், ஜோதிர் ஆதித்யா சிந்தியா, அன்னபூர்ணா தேவி, ஹர்தீப் சிங் பூரி, சிராக் பாஸ்வான் உள்ளிட்ட பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளில் தேர்வு செய்யப் பட்ட 72 பேர் ஒன்றிய அமைச்சர்களாக பதவியேற்றனர். இதில் 39 பேர் ஏற்கெனவே ஒன்றிய அமைச்சர்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வாரணாசியில் கடும் சேதாரத்தை சந்தித்தவர்
2019ஐ விட 5 சட்டமன்ற தொகுதிகளிலும் செல்வாக்கு கடும் சரிவு
80 மக்களவை தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தை தனது வாக்கு வங்கியின் கோட்டை எனக் கூறிக்கொள்ளும் பாஜக, கடந்த 2014 (71 தொகுதிகள்) மற்றும் 2019 (62 தொகுதிகள்) மக்களவை தேர்தலில் பெற்ற வெற்றியைவிட தற்போது நிறைவுபெற்ற 18ஆவது மக்களவை தேர்தலில் பலத்த சேதாரத்தை சந்தித்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநில மக்களின் அமோக ஆதரவை பெற்ற “இந்தியா” கூட்டணி மொத்தமுள்ள 80 மக்களவை தொகுதிகளில் 44 தொகுதிகளை (சமாஜ்வாதி - 37, காங்கிரஸ் - 6, ஆசாத் சமாஜ் - 1) கைப்பற்றியது. பாஜக கூட்டணி 36 தொகுதிகளை (பாஜக - 33, ஆர்.எல்.டி - 2, அப்னா தளம் (எஸ்) - 1) மட்டுமே பெற்றது.
பரிதாப நிலையில் மோடி
குறிப்பாக உத்தரப்பிரதேச மாநிலத்தின் வாரணாசி தொகுதியில் கடந்த 2 மக்களவைத் தேர்தலில் 35%க்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை பெற்ற பிரதமர் மோடி, 2014, 2019 மக்களவை தேர்தல்களை விட 2024 மக்களவை தேர்தலில் 13.50% வாக்கு வித்தியாசத்தை மட்டுமே பெற்று மிக மோசமான சரிவை சந்தித்துள்ளார்.
5 சட்டமன்ற தொகுதிகளிலும் மோடிக்கு பலத்த அடி
வாரணாசி மக்களவை தொகுதியில் ரோஹானியா, சேவாபுரி, வாரணாசி கண்டோன்மென்ட், வாரணாசி வடக்கு, வாரணாசி தெற்கு ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2019 மக்களவை தேர்தலை விட ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 10 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வாக்குகளை மோடி இழந்துள்ளார். மொத்தமாக 5 சட்ட மன்ற தொகுதியிலும் 9.38% வாக்குகள், அதாவது 61,694 வாக்குகளை இழந்துள்ளார் மோடி.
இதில் மிக முக்கிய மான விஷயம் என்னவென்றால் வாரணாசி மக்களவை தொகுதியில் உள்ள 5 சட்டமன்ற தொகுதியிலும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் எம்.எல்.ஏ-க்களே உள்ள நிலையில், மோடிக்கு 5 சட்டமன்ற தொகுதிளிலும் கடும் எதிர்ப்பலை எழுந்துள்ளதை தேர்தல் முடிவுகள் பிரதிபலித்துள்ளன.
பறிபோன 3.26 லட்சம் வாக்குகள் வித்தியாசம்
பிரதமர் மோடி (6,74,664 வாக்குகள்) கடந்த 2019 மக்களவை தேர்தலில் 3,26,992 வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜ்வாதி வேட்பாளர் ஷாலினியை (1,95,159 வாக்குகள்) தோற்கடித்தார். ஆனால் 2024 மக்களவை தேர்தலில் “இந்தியா” கூட்டணி வேட்பாளரான காங்கிரஸ் கட்சியின் அஜோய் குமார் 4,60, 457 வாக்குகள் பெற்றதால் பிரதமர் மோடியின் (6,12,970) வெற்றி வாக்கு வித்தியாசம் 1,52,513 ஆக குறைந்துள்ளது. கிட்டத்தட்ட இரண்டரை மடங்கு வாக்குகள் வித்தியாசத்தை மோடி இழந்துள்ளார்.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!