India

தொடர்ந்து நடைபெறும் முறைகேடு... போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள்... போலிசார் தாக்குதல்!

மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என ஒன்றிய அரசு அறிவித்தது முதல், மருத்துவப் படிப்புக் கனவுகள் தகர்ந்துபோய்த் தவித்து வருகிறார்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள். மருத்துவம் படிக்க தகுதி இருந்தும், நீட் தேர்வால் தங்கள் கனவு நிறைவேறாமல் போனதால் கடந்த ஆண்டுகளில் மாணவர்கள் பலர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வில் கூட பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட பெற்றோர்கள், மாணவர்கள், தேர்வு நடத்தும் அதிகாரிகள் என 30-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். நாடு முழுவதும் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த சூழலில் எந்த ஆண்டும் இல்லாத அளவில் இந்த ஆண்டு 67 மாணவர்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்ததாக அறிவிக்கப்பட்டது. அதே நேரம் நீட் தேர்வில் முதலிடம் பிடித்த 67 பேரில் 8 பேர் ஹரியானாவில் உள்ள ஒரேமையத்தில் தேர்வு எழுதியவர்கள் என்றும், அவர்களது பதிவு எண் ஒரே வரிசையில் தொடங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனவே இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த வகையில் பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிர மாநில அரசும், ஒன்றிய பாஜக அரசுக்கு வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து நீட் தேர்வு மோசடி குறித்து குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் ஒன்றிய உயர்கல்வித் துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

எனினும் மாணவர்கள் பல்வேறு இடங்களில் நீட் தேர்வு முறைகேடுக்கு எதிராக தங்கள் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். குறிப்பாக நேற்று (ஜூன் 8) மோடி போட்டியிட்ட உ.பியின் வாரணாசியில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து இன்று டெல்லியில் இளைஞர் காங்கிரஸ் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் போராட்டத்தின்போது போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மத்திய பிரதேசத்தில் நடைபெறும் போராட்டத்தின்போது, முறைகேடுக்கு உறுதுணையாக இருந்த அம்மாநில பாஜக அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

இதனால் மாநில பாஜக அரசின் பேச்சை கேட்டு போலீசார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியதோடு, தண்ணீர் பாய்ச்சி போராட்டத்தை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மேலும் அங்கே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டை தொடர்ந்து தற்போது இந்தியாவே களமிறங்கியுள்ளது.

நீட் தேர்வில் ஆண்டுதோறும் முறைகேடு நடைபெற்று வரும் நிலையில் கூட ஒன்றிய பாஜக அரசு அதனை கண்டுகொள்ளாமல் மெத்தமனமாக இருந்து வந்துள்ளது. இந்த ஆண்டு நடைபெற்ற தேர்வானது, வினாத்தாள் கசிவு, லஞ்சம் பெற்று வினாத்தாள் கொடுக்கப்பட்டது, ஆள் மாறாட்டம், பாரபட்சம் பார்த்து வழங்கப்பட்ட கருணை மதிப்பெண் என பல விஷயங்களில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியானது.

இதையடுத்து தற்போது நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மாணவர்கள் தரப்பு மட்டுமின்றி, மக்கள் தரப்பில் இருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்விளைவே போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த முறையாவது ஒன்றிய NDA அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Also Read: “மோடிக்கு முதல் அடியை கொடுத்தது தமிழ்நாடு தான்...” - தமிழச்சி தங்கபாண்டியன் பேட்டி !