India

தொடரும் நீட் தேர்வு முறைகேடு : குவிந்த புகார்கள்... வழக்கை விசாரிப்பதாக உயர்நீதிமன்றம் அறிவிப்பு !

மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என ஒன்றிய அரசு அறிவித்தது முதல், மருத்துவப் படிப்புக் கனவுகள் தகர்ந்துபோய்த் தவித்து வருகிறார்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள். மருத்துவம் படிக்க தகுதி இருந்தும், நீட் தேர்வால் தங்கள் கனவு நிறைவேறாமல் போனதால் கடந்த ஆண்டுகளில் தற்கொலை ஏராளமான செய்துகொண்டு வருகின்றனர்.

நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழகமே கொந்தளித்தபோதும், கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தேர்வை நடத்தி வருகிறது ஒன்றிய அரசு. தமிழ்நாட்டில் தொடங்கிய இந்த நீட் எதிர்ப்பு போராட்டம் தற்போது பல்வேறு இடங்களில் எதிரொலித்து வருகிறது. பல்வேறு தரப்பில் இருந்தும் நீட் தேர்வுக்கு எதிரான மனநிலை தற்போது அதிகரித்து வருகிறது.

அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வில் கூட பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட பெற்றோர்கள், மாணவர்கள், தேர்வு நடத்தும் அதிகாரிகள் என 30-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். நாடு முழுவதும் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த சூழலில் எந்த ஆண்டும் இல்லாத அளவில் இந்த ஆண்டு 67 மாணவர்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்ததாக அறிவிக்கப்பட்டது. அதே நேரம் நீட் தேர்வில் முதலிடம் பிடித்த 67 பேரில் 8 பேர் ஹரியானாவில் உள்ள ஒரேமையத்தில் தேர்வு எழுதியவர்கள் என்றும், அவர்களது பதிவு எண் ஒரே வரிசையில் தொடங்குவதாகவும் சில மாணவர்கள் குற்றம்சாட்டி பதிவு வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில், தேர்வு மையத்தில் 8 மாணவர்கள் முதலிடம் பிடித்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலம் ஜாஜர் என்ற இடத்தில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தில் 8 மாணவர்கள் முதலிடம் பிடித்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது தவிர ட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக டெல்லி உயர்நீதி மன்றத்தில் மாணவர்கள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கருணை மதிப்பெண்கள் வழங்கியதில் பெருமளவுக்கு மோசடி நடந்திருப்பதாக மனுவில் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். அது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், கருணை மதிப்பெண்களை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். வழக்கின் விசாரணை 12 ஆம் தேதி நடைபெறும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Also Read: "இஸ்லாமிய இடஒதுக்கீடு நீடிக்க வேண்டும்"- தெலுங்கு தேசம் கட்சி உறுதி... அதிர்ச்சியில் பாஜக தலைவர்கள் !