India

கூட்டணிகளை அவமதிக்க வாய்ப்பில்லை : மோடி ஆட்சியில் நிகழும் மாற்றம்!

18ஆவது மக்களவை தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், பா.ஜ.க.வின் தனிப்பெரும்பான்மை கை நழுவியுள்ள போதும், கூட்டணி கட்சிகளின் தயவால் ஆட்சியை தக்கவைக்கிறார் மோடி.

ஆட்சியமைக்க 272 இடங்கள் தேவை என்ற சூழலில், 240ஐ வைத்துக்கொண்டு, 32 இடங்களுக்கு, கூட்டணிகளை நாடி இருக்கிறது சர்வாதிகார பா.ஜ.க கட்சி.

கூடுதலாக, தற்போது NDA கூட்டணியில் இருக்கும் கட்சிகளான, தெலுங்கு தேசம் கட்சி, ஐக்கிய ஜனதா தளம் கடந்த காலங்களில் பா.ஜ.க.வை விமர்சித்த கட்சிகள் என்ற வரலாறை கொண்டிருப்பதால், ஆட்சியின் மீது பா.ஜ.க.விற்கு அச்சமும் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, தெலுங்கு தேசம் கட்சி, 2014ஆம் ஆண்டு பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து, பிறகு பா.ஜ.க.வின் வண்டவாள, தண்டவாளங்களை வேறுபிரித்து காட்டிய கட்சி.

மோடி அரசு, இந்திய ஜனநாயகத்திற்கே அச்சுறுத்தலாக விளங்குகிறது என்ற கருத்தை முன்வைத்தவர், தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு.

தெலுங்கு தேசத்தை அடுத்து, அதிகப்படியான இடங்களை வென்றுள்ள NDA கூட்டணி கட்சி நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம்.

நிதிஷ் குமார், கடந்த 2022 பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து, அதில் அதிருப்தி கண்டு, பிரிந்தவர் என்ற வரலாறும், தற்போது அவரின் தயவும், மோடி பிரதமராக நீடிப்பதற்கு ஒரு முக்கிய காரணம் என்ற உண்மையும், பா.ஜ.க.வை கதிகலங்க வைத்து வருகிறது.

இவ்விரு கட்சிகளை அடுத்து 7 இடங்களுடன் கூட்டணியில் முன்னிலை வகிக்கும் கட்சியாக மகாராஷ்டிரத்தின் சிவசேனா (ஷிண்டே) அமைந்துள்ளது.

கடந்த கால NDA கூட்டணியில், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததற்காக, சிவசேனா (ஷிண்டே) தலைவர் ஏக்நாத் ஷிண்டே சந்தித்த எதிர்ப்புகள் அதிகம்.

அதற்கு காரணமாய் அமைந்த பல நிகழ்வுகளில், மகாராஷ்டிர மாநிலம் பெறப்பட வேண்டிய முதலீடுகளை, குஜராத்திற்கு தாரைவார்த்துக்கொடுத்த நிகழ்வும் இன்றியமையாத இடத்தை பெற்றிருக்கிறது.

இதனால், ஏக்நாத் பிரியாவிட்டாலும், ஏக்நாத் கட்சியை நேர்ந்தவர்கள், NDA கூட்டணியை விட்டு நழுவ கூடுதல் வாய்ப்பு இருக்கிறது.

அதையடுத்து, 5 இடங்களுடன் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) கட்சி, பீகாரின் தலித் சமூகத்தினரின் ஆதரவை பெற்றுள்ளது.

பொதுவாகவே, தலித் சமூகத்தினருக்கு எதிரான நடவடிக்கைகளில் மும்முரம் காட்டும் கட்சியாக பா.ஜ.க இருப்பதால், இந்த கூட்டணியும் எந்நேரமும் கவிழ வாய்ப்புள்ளது.

பிறகு, தலா 2 இடங்களுடன், மதச்சார்பற்ற ஜனதா தளமும், இராஷ்டிரிய லோக் தளமும் இடம்பெற்றுள்ளன.

இவ்விரு கட்சிகளும், பா.ஜ.க.வின் ஆதரவை நாடியிருந்தாலும், பா.ஜ.க - இவ்விரு கட்சிகளை பெரிய பொருட்டாக மதிக்கவில்லை.

இது போன்ற சூழலில், மோடி ஆட்சியமைப்பது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “மோடி 3.0 என்ற முழக்கம் தொடர்ந்து முன்மொழியப்பட்டு வருகிறது. ஆனால், உண்மையில் அமைய இருக்கிற ஆட்சி, 3.0 அல்ல. மோடி 1/3 ஆட்சி தான்” என தெரிவித்துள்ளார்.

இதனால், மோடியும் முகத்திலும் சோகம் தாண்டவமாடி வருகிறது.

Also Read: சர்வாதிகாரத்தை வென்ற இந்தியா கூட்டணி : தனிப் பெரும்பான்மையை இழந்த பா.ஜ.க!