India

”பாஜக அரசின் பாசிச கொள்கைக்கு எதிராக இந்தியா கூட்டணி தொடர்ந்து போராடும்” : மல்லிகார்ஜூன கார்கே பேட்டி!

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற 18 ஆவது மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்று முடிவுகள் வெளியாகின. இதில் இந்தியா கூட்டணி 234 இடங்களையும் பாஜக கூட்டணி 292 இடங்களையும் பிடித்துள்ளது.

இந்த சூழலில் பாஜக தனித்து 240 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும், அதற்கு தனி பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி கட்சிகளோடு இணைந்து ஆட்சியை பிடிக்கும் நிர்பந்தத்தில் பாஜக உள்ளது.

இந்தியா கூட்டணி சந்திரபாபு நாயுடு மற்றும் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிகிறது. அந்த இரண்டு முதல்வர்களும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தால், பெரும்பான்மை பெற்று இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்கும். எனினும் அந்த இரண்டு கட்சிகளும் பா.ஜ.க கூட்டணியில் உள்ளது.

400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என கூவி வந்த பா.ஜ.கவால் ஆட்சி பிடிப்பதற்காக 272 தொகுதிகளை கூட பெறமுடியவில்லை. இதற்கு காரணம் இந்தியா கூட்டணியின் எழுச்சியே காரணமாகும்.

இந்நிலையில் இன்று டெல்லியில் இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

பின்னர் ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த மல்லிகார்ஜூன கார்கே, "பா.ஜ.கவின் வெறுப்பு அரசியல் மற்றும் ஊழலுக்கு எதிராக மக்கள் தீர்ப்பளித்துள்ளனர். பா.ஜ.க அரசின் பாசிச கொள்கைக்கு எதிராக இந்தியா கூட்டணி தொடர்ந்து போராடும்.

மதவாத அரசியல் சக்திகள் மலரவே முடியாதபடி செய்திருக்கிறோம். பா.ஜ.க அரசின் ஜனநாயக விரோத செயல்களுக்கு எதிராகவும் மக்கள் வாக்களித்துள்ளனர். மோடியின் பணக்கார நண்பர்களுக்கு ஆதரவான கொள்கைகளுக்கு எதிராகவும் மக்கள் வாக்களித்துள்ளனர்.

இந்தியா கூட்டணிக்கு அமோக ஆதரவு அளித்த இந்திய மக்களுக்கு நன்றி. பாஜகவுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்கள். விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் முதலாளித்துவத்துக்கு எதிராகவும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதற்கும், ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்குமான மக்களின் தீர்ப்பு இதுவாகும்" என தெரிவித்துள்ளார்.

Also Read: மீண்டும் அதே பாதை! : முரணை வளர்த்து ஆட்சியை கவிழ்த்த பா.ஜ.க!