India

முடிவடைந்த நாடாளுமன்ற தேர்தல் : 36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இன்று முதல் அமல் !

இந்தியாவில் சாலைகள் 4 வழி சாலையாக மேம்படுத்தப்பட்ட பின்னர், அங்கு சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு சுங்கச்சாவடி கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சுங்க கட்டணத்தை குறைக்க வேண்டும் மற்றும் சுங்கச்சாவடிகளையும் குறைக்க வேண்டும் என பொதுமக்கள் உட்பட மாநில அரசுகள் ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி வருகிறது.

ஆனாலும் ,ஒன்றிய அரசு சுங்க கட்டண தொகையை அதிகரித்தவண்ணம் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் சுங்க கட்டணங்களை நேரடியாகப் பணம் செலுத்துவதை தவிர்ப்பதற்காக பாஸ்டேக் முறையை அமல்படுத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.

பாஸ்டேக் முறையை அமல்படுத்தப்பட்டதால் போக்குவரத்துத் துறைக்கான வருவாய் அதிகரித்துள்ளதாக ஒன்றிய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருந்தார். ஆனாலும், இந்த வருவாய் போதவில்லை என ஒன்றிய பாஜக அரசு மேலும் மேலும் சுங்கக்கட்டணத்தை அதிகரித்து வருகிறது.

அதன்படி கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி, சுங்கச்சாவடி கட்டணம் மாற்றி அமைக்கப்படும் என தகவல் வெளியான நிலையில், சுங்கச்சாவடி கட்டண மாற்றம் இரண்டு மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்தது. இதற்கு மக்களவை தேர்தல் முக்கிய காரணமாக கூறப்பட்டது.

இந்த நிலையில், மக்களவை தேர்தல் முடிவடைந்த நிலையில், 36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வர உள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கூறியுள்ளது. சென்னை புறநகரில் உள்ள பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளிலும் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இதற்கு லாரி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் .

Also Read: ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர் : மோடியின் தயவால் அம்பானியை விஞ்சி சாதனை படைத்த அதானி !