India

தண்ணீரில் வீசப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் : மேற்கு வங்கத்தில் தொடரும் மோதல் !

இந்தியாவில் 7 கட்டமான நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலின் தொடக்கத்தில் 400 இடங்களுக்கு மேல் வெல்வோம் என்று சொன்ன பாஜக தலைவர்கள் தற்போது இந்தியா கூட்டணிக்கு ஆட்சிக்கு வந்தால் யார் பிரதமர் என்ற ரீதியில் பேசி வருகின்றனர்.

ஏற்கனவே விவசாயிகள் போராட்டம், ராஜ்புத் சமூகத்தினரின் போராட்டம் என பாஜகவுக்கு ஆதரவான வடமாநிலங்களில் இந்த முறை பாஜக பெரும் பின்னடைவை சந்திக்கும் என கூறப்பட்டு வருகிறது. இதனால் பாஜகவினர் பல்வேறு முறைகேடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று பல்வேறு மாநிலங்களில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மேற்குவங்க மாநிலம் , குல்தாய் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி எண் 40, 41-ல், இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியதுமே வன்முறை ஏற்பட்டது.

இதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள் தண்ணீரில் வீசப்பட்டன. இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும், இந்த இயந்திரங்கள், பழுது ஏற்பட்டால் மாற்றுவதற்காக வைக்கப்பட்டிருந்த கூடுதல் இயந்திரங்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் தோல்வி பயத்தில் பாஜகவினரே இத்தகைய வன்முறை சம்பவத்தில் ஈடுபடுவதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. அதோடு பல இடங்களில் பாஜக மற்றும் எதிர்க்கட்சி தொண்டர்களுக்கு இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: "அடுத்த இந்திய பிரதமராக ராகுல் காந்தியைதான் தேர்வு செய்வேன்"- மல்லிகார்ஜுன கார்கே !