India

நாட்டையே உலுக்கிய பாலியல் வழக்கு : ஒரு மாதம் தலைமறைவாக இருந்த பிரஜ்வல் ரேவண்ணா கைது!

கர்நாடகா மாநிலம் ஹாசன் தொகுதி வேட்பாளரும், பாஜகவின் கூட்டணி கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் (JDS) எம்.பியுமாக இருப்பவர் பிரஜ்வல் ரேவண்ணா. கடந்த மாதம் இவர் தொடர்பான ஆபாச வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்திற்கு ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர். பெண்களின் பாதுகாவலர்கள் நாங்கள் என்று சொல்லும் பா.ஜ.க எப்படி, இப்படி ஒருவரை தேர்தலில் போட்டியிட அனுமதித்தது? என்ற கேள்வியும் எழுந்தது.

இதையடுத்து வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவை பிடிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு தீவிரம் காட்டி வந்தது. மேலும் சிறப்பு புலனாய்வு பிரிவு போலிஸார் 2 முறை லுக் அவுட் நோட்டீஸும் ஒரு முறை புளூ கார்னர் நோட்டீஸும் பிறப்பித்தனர். அவரது தூதரக பாஸ்போர்ட்டை முடக்குமாறு வெளியுறவுத் துறைக்கு கடிதம் எழுதினர்.

இதனைத் தொடர்ந்து ஜெர்மனியில் இருந்து பிரஜ்வல் ரேவண்ணா நாடு திரும்புவதாக தகவல் வெளியானது. இதையடுத்து நேற்றில் இருந்தே சிறப்பு விசாரணைக்குழு பெங்களூரு விமான நிலையத்தில் முகாமிட்டிருந்தது.

இந்நிலையில் இன்று நள்ளிரவு பெங்களூரு விமான நிலையம் வந்த பிரஜ்வல் ரேவண்ணாவை சிறப்பு விசாரணைக்கு போலிஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பிறகு அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். மேலும் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Also Read: 57 தொகுதிகளுக்கு இறுதிக்கட்ட தேர்தல்... எந்தெந்த மாநிலங்களில் வாக்குப்பதிவு? - முழு விவரம்!