India

அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென பயங்கர சத்தம்... 10-வது மாடியில் சூழ்ந்த கரும்புகை - நடந்தது என்ன?

உத்தர பிரதேச மாநில எல்லையில் அமைந்துள்ள நொய்டாவில், செக்டார் 100-ல் லோட்டஸ் பவுல்வர்டு என்ற அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இங்கு குடும்பங்கள் பல வசித்து வருகிறது. குறிப்பாக வெளி பகுதிகளில் இருந்து பணி புரிவதற்கு வந்தவர்கள் தங்கள் குடும்பத்தோடு வசித்து வருகின்றனர். இந்த சூழலில் இங்கிருக்கும் 10-வது மாடியில் இருந்து திடீரென பலத்த சத்தம் கேட்டுள்ளது.

இதனால் அக்கம்பக்கத்தினர் என்னவென்று பார்க்க சென்றபோது, அங்கே இருந்த AC திடீரென வெடித்து தீப்பற்றியுள்ளது தெரியவந்தது. இதையடுத்து உடனே இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் 5 வாகனங்களில் விரைந்து வந்த அவர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

எனினும் ஏசி வெடித்ததில் அந்த பகுதி முழுக்க கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. இதனால் அந்த பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் இருந்தனர். தற்போது இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தீயணைப்புத் துறையினர் கூறுகையில், “அந்த பகுதி மக்கள் எங்களுக்கு ஃபோன் செய்த சில நிமிடங்களில் 5 வாகனங்களில் விரைந்து வந்தோம். பின்னர் உடனடியாக தண்ணீர் பாய்ச்சி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம். தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது” என்றனர். தொடர்ந்து ஏசி எவ்வாறு திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Also Read: வயிறு வலியால் துடித்த இளம்பெண்... பரிசோதனையில் அதிர்ச்சி... 2.5 கிலோ முடி அகற்றம்!