India

தெரு நாய்கள் தாக்குதலில் இறந்த சிறுமி: இறைச்சி கடைகளை இடிக்க உத்தரவிட்ட பாஜக மேயர்... உ.பியில் அதிர்ச்சி!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூரில் கடந்த ஞாயிறு அன்று சாலையோரம் தனது தாயுடன் தூங்கிக்கொண்டிருந்த இரண்டு சிறுமிகளை அங்கிருந்த தெருநாய்கள் திடீரென கடிக்க தொடங்கியுள்ளது. இதனால் சிறுமிகள் கத்தி கூச்சலிட்டுள்ளனர்.

இதனை கேட்ட தாய் உடனடியாக மகள்களை காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனாலும் தெருநாய்கள் தாக்குதலை நிறுத்தவில்லை. இதனிடையே அந்த பகுதியில் இருந்தவர்கள் வந்து நாய்களை விரட்டி அந்த சிறுமிகளை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி 4 வயது சிறுமி உயிரிழந்த நிலையில், மற்றொரு சிறுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து தெருநாய்கள் தொல்லை குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அந்த பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அங்கு வந்த கான்பூரின் பாஜக மேயர் பிரமிளா பாண்டே, தெருநாய்கள் தொல்லையை குறைக்க நடவடிக்கை எடுக்காமல் அங்குள்ள இறைச்சி கடைகளை இடிக்க உத்தரவிட்டார். இறைச்சி விற்பனையாளர்கள் தங்கள் கடைகளில் மீதமாவதை நாய்களுக்கு உணவாக அளிப்தே தெருநாய்கள் தொல்லைக்கு காரணம் என்றும் கூறியுள்ளார்.

அதன் பின்னர் மேயரின் உத்தரவு படி புல்டோசர்களில் வந்தவர்கள் அங்கிருந்த இறைச்சி கடைகளை இடித்து தள்ளினர். மேலும், இனி அந்த பகுதியில் இறைச்சி கடைகள் திறக்கக்கூடாது என்றும் மேயர் பிரமிளா பாண்டே எச்சரிக்கை விடுத்துள்ளார். பாஜக மேயரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: காரில் கடத்தப்பட்ட தொழிலதிபர்: ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டிய கும்பல்... நம்பவைத்து ஏமாற்றிய இளம்பெண் கைது!