India

”பிரதமர் மோடியை மனநல மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டும்” : ராகுல் காந்தி MP கிண்டல்!

18 ஆவது மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் நிலையில் முதல் 5 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 6 ஆம் கட்ட மக்களவை தேர்தல் 58 தொகுதிகளில் மே 25 ஆம் தேதி நடைபெறுகிறது. மேலும் 6 ஆம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று நிறைவடைந்தது.

இதற்கிடையில், வடகிழக்கு டெல்லியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கன்னையா குமாரை ஆதரித்து ராகுல் காந்தி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய ராகுல் காந்தி, "இந்திய அரசியலமைப்பு, நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க பல கருத்தியல்களையும், சிந்தனைகளையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்டது. அதனை அழிப்பதற்கு பா.ஜ.க கனவுகாண வேண்டாம். இவர்களின் கனவு ஒரு போதும் நடக்காது.

காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையிலேயே 50% இருக்கும் இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என்ற வாக்குறுதியை முன்மொழிந்துள்ளது. ஆனால், பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் அதற்கு முடிவுகட்டும் வகையில் பேசி வருகிறார்கள்.

மோடியின் ரசிகர்கள் அவரை ஒரு நேர்காணல் எடுத்திருக்கிறார்கள். கடவுள் தன்னை அனுப்பியதாக சொல்கிறார் மோடி. உடனே ரசிகர்கள் அற்புதம், அற்புதம் என ரசிக்கிறார்கள். ஆனால் இவர்தான், கோவிட் வந்து மக்கள் செத்துக் கொண்டிருந்தபோது, பாத்திரங்களை தட்டுங்கள், செல்பேசியின் விளக்கை போடுங்கள் என சொல்லிக் கொண்டிருந்தார். இப்படிப்பட்ட ஒருவரை எப்படி கடவுள் அனுப்புவார்?

சமீப நாட்களாக பிரதமர் சொல்லும் விஷயங்களை ஒரு சாமானியர் பேசி இருந்தால் அவரை நாம் மனநல மருத்துவரிடம்தான் அழைத்துச் செல்வோம். தன்னை கடவுள் அனுப்பியதாக கூறும் மோடி 22 தொழிலதிபர்களுக்காக மட்டுமே வேலை செய்கிறார். அம்பானி, அதானியின் விருப்பத்தின் பேரிலேயே பிரதமர் அனைத்தையும் செய்கிறார். ஏழைகளுக்கு சாலைகள், மருத்துவமனை, கல்வி குறித்து கோரிக்கை வைத்தால் மோடி எதுவும் செய்வதில்லை" என தெரிவித்துள்ளார்.

Also Read: "பிரஜ்வல் ரேவண்ணா எங்கிருந்தாலும் போலீஸில் சரணடைய வேண்டும்" - JDS தலைவர் தேவகவுடா காட்டம் !