India

அதானி நிறுவனத்தின் மிகப் பெரிய நிலக்கரி ஊழல் : வெளிச்சம் போட்டு காட்டிய Financial Times!

2014 ஆம் ஆண்டு பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து 2024 ஆம் ஆண்டுவரை இந்த 10 ஆண்டுகள் அதானி, அம்பானியின் சொத்து மதிப்புகள் பல மடங்கு உயர்ந்துள்ளது. LIC உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் அதானி அம்பானிக்கு ஒன்றிய அரசு விற்றுள்ளது.

அதேபோல் ரயில்வே, விமான நிலையங்களையும் தனது நண்பர்களுக்கு மோடி விற்றுள்ளார். மேலும் மோடி அரசை பயன்படுத்திக் கொண்டு மறைமுகமாக பல ஊழல்களை அதானியும் அம்பானியும் செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு அதானியின் மிகப்பெரிய முறைகேட்டை அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஹிண்டன்பர்க் ரிசர்ச் எல்எல்சி என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்டது.

அதில், அதானி குழும நிறுவனங்கள் வரவு - செலவு கணக்கில் மோசடி, வரி ஏய்ப்பு, சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்த குற்றச்சாட்டு இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்திலும் வெடித்தது. ஆனால் இது குறித்து ஒரு வார்த்தை கூட பிரதமர் மோடி பேசவில்லை.

தற்போது ஒன்றிய அரசின் உதவியுடன் தரமற்ற நிலக்கரியை வாங்கி, அதை அதிக லாபத்திற்கு விற்று அதானி நிறுவனம் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. இந்த முறைகேட்டை Financial Times வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது.

2014 ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் இருந்து இந்தியாவிற்கு நிலக்கரி இறக்குமதி செய்ததில் அதானி நிறுவனம் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. அதாவது 3500 கிலோ கலோரி திறன் கொண்ட நிலக்கரியை வாங்கி அதை 6000 கலோரிக்கு தமிழ்நாடு மின்வாரியத்திடம் விற்பனை செய்துள்ளது.

அப்போது தமிழ்நாட்டில் அ.தி.மு.க ஆட்சி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி நிலக்கரியை அதிக விலைக்கு விற்று பல கோடிக்கு அதானி நிறுவனம் முறைகேடாக லாபம் ஈட்டியுள்ளது.

மேலும் 2021 மற்றும் 2023 க்கு இடையில், சந்தை விலையை விட அதிகமாக இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரிக்காக, இடைத்தரகர்களுக்கு 5 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை அதானிக்குழுமம் வழங்கியதாக Financial Times சுட்டிக்காட்டியுள்ளது.

இதையடுத்து அதானி நிறுவனத்தின் இந்த நிலக்கரி ஊழல் குறித்து எதிர்க்கட்சிகள் ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Also Read: கேள்வியும் நானே, பதிலும் நானே : மோடியின் ஜோடிக்கப்பட்ட நேர்காணல்கள், வெற்று பேச்சுகள்!