India

”இந்தியா கூட்டணி 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும்” : மல்லிகார்ஜூன கார்கே திட்டவட்டம்!

18 ஆவது மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் நிலையில் முதல் நான்கு கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. 5 ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 20 ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில் மும்பையில் நேற்று இந்தியா கூட்டணி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், உத்தவ் தாக்கரே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.

இந்த கூட்டத்தில் பேசிய மல்லிகார்ஜூன கார்கே, " அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை முடிவுக்கு கொண்டுவர பா.ஜ.க விரும்புகிறது. இவர்களது ஆசையை நிறைவேற்றுவதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது.

அரசியலமைப்பு சட்டத்தையும், ஜனநாயகத்தையும் நாம் பாதுகாக்க வேண்டும். விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் ஆகிய இரண்டு தீவிரமான பிரச்சனைகளை நாடு எதிர்கொள்கிறது. ஆனால் 10 ஆண்டுகளில் பா.ஜ.க அரசு இந்த பிரச்சனையை தீர்க்க தவறிவிட்டது. அரசு துறையில் 30 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளது. இவற்றை மோடி அரசு நிரப்பவில்லை.

நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு மக்கள் அமோக ஆதரவு கொடுத்து வருகிறார்கள். மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்" என தெரிவித்துள்ளார்.

Also Read: “உங்களுக்கு வெட்கமே இல்லையா?” - மம்தா குறித்த பாஜக வேட்பாளரின் பேச்சுக்கு குவியும் கண்டனம்!