India
”பிரதமர் மோடி ஒரு பொய்யர் என்பதை நாடு நன்றாக அறிந்து விட்டது ” : ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்!
பிரதமர் பதவியிலிருந்து வெளியேற்றப்படவுள்ள மோடி ஒரு பொய்யர் என்பதை நாடு நன்றாக அறிந்து வைத்திருக்கிறது காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்து - முஸ்லீம் மக்களை பிளவுப்படுத்தும் அரசியலில் ஈடுபட்டு வரும் பிரதமர் மோடி, தற்போது மேலும்பல பொய்களை பேசி வருவதாக கண்டனம் தெரிவித்துள்ளார். முதல்கட்ட தேர்தல் நடைபெற்ற ஏப்ரல் 19ஆம் தேதியே நாட்டுக்கு மோடி வேண்டாம் என மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
மாநில மொழிகளையும், அவர்களின் பாரம்பரியத்தையும், கொள்கைகளையும் அழிக்க மோடி முயற்சிப்பதாக ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார். தேர்தல் விதிமீறலில் ஈடுபடாத எதிர்க்கட்சியினர் மீது பொய் குற்றச்சாட்டின்பேரில் நடவடிக்கை எடுக்கும் தேர்தல் ஆணையம், உண்மையில் தேர்தல் விதிமீறலில் ஈடுபடும் பிரதமர் மோடி மீதும், பா.ஜ.க., வினர் மீது நடவடிக்கை எடுப்பதில்லை என்று விமர்சித்துள்ளார்.
400 தொகுதிகளில் வெற்றி என்ற மோடியின் கனவு தவிடுபொடியாக போவது உறுதி என்று அவர் தெரிவித்துள்ளார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத மோடிக்கு தோல்வி காத்திருக்கிறது என்றும் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் நீண்ட பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அப்பதிவில் அவர், “ஒட்டுமொத்த தேசமும் வெளியேறப் போகும் நமது பிரதமர் ஒரு பொய்யர் என்றும், போலித்தனம் அவரின் இயல்பு என்பதையும் அறியும். எனினும், தன்னிரக்கம் கோரும் அவரது வழக்கப்படி, அவர் இந்து - முஸ்லிம் அரசியலை தான் கையில் எடுக்கவில்லை என்று கூறியிருப்பது தினமும் பொய் பேசும் புதிய ஆழத்துக்குள் அவர் தன்னைப் புதைந்து கொள்வதையே காட்டுகிறது.
2024, ஏப்.19ம் தேதி முதல் பிரதமர் திரும்பத் திரும்ப வெளிப்படையாகவும், கூச்சமின்றியும் வகுப்புவாதத்தைத் தூண்டும் மொழிகள், குறியீடுகள், சின்னங்களைப் பயன்படுத்தி வந்தார் என்பது வெளிப்படையான உண்மை. இந்த உண்மைகளை பிரதமர் மோடி அவரின் தனிப்பட்ட நினைவுகளில் இருந்து அழித்து விட்டாலும், நமது கூட்டு நினைவுகளில் இருந்து அவற்றை அழிக்க முடியாது. பிரதமரின் இந்த செயல்களை நாம் தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு எடுத்துச் சென்றும் துரதிருஷ்ட வசமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்தத் தேர்தல் பிரச்சாரம் முழுவதும் பிரதமரின் பேச்சில் இந்து - முஸ்லிம் அரசியலைத் தவிர வேறு எதுவும் இடம்பெறவில்லை. அவரது கட்சியின் தேர்தல் அறிக்கை, அவரது சொந்த புகைப்பட வரிசைகள், குழப்பமான வார்த்தைகள் மக்களால் முழுவதுமாக நிராகரிக்கப்பட்டு விட்டன. கடந்த சில மாதங்களாக அரசுப் பணத்தில் பெரும் பொருள் செலவில் கொடுக்கப்பட்ட ‘மோடியின் உத்திரவாதம்’ பிரச்சாரம் வீழ்ச்சியடைந்து விட்டது.
அவரது பிரச்சாரத்தை முன்னெடுப்பதற்கான கடைசி முயற்சி என்பது காங்கிரஸ் கட்சியைப் பற்றி பொய்யுரைப்பதுதான். அவர் பதவியில் இருந்து இறக்கப்படுவது உறுதியாகி விட்டது. இந்த நிலையில், தற்போது அவர் எல்லாவற்றையும் மறந்தவர் போல நடிக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளார்” என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!