India

100 அடி ராட்சத இரும்பு பேனர் விழுந்து கோர விபத்து... உயரும் பலி எண்ணிக்கை - மும்பையில் அதிர்ச்சி !

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அமைந்துள்ள தானே உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று கனத்த மழை பெய்தது. மேலும் மாலை நேரத்தில் திடீரென புழுதிப்புயலும் வீசியது. இதனால் ஒரு சில இடங்களில் சேதாரம் ஏற்பட்டது. அந்த வகையில் ஆரே - அந்தேரி இடையே வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர் திடீரென சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

சுமார் 60 கி.மீ வேகத்தில் வீசிய புழுதிப்புயலால் ஆரே - அந்தேரி இடையே வைக்கப்பட்டிருந்த சுமார் 100 அடி உயர விளம்பர பேனர் சட்டென்று சரிந்து விழுந்தது. பெட்ரோல் பங்க் மீது விழுந்த இந்த பேனரால் அந்த பகுதிகளில் இருந்தவர்கள் கடும் காயமடைந்தனர். மேலும் பலரும் இதில் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து இந்த விவகாரம் குறித்து அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத்துறைக்கு தகவ தெரிவித்தனர்.

அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள், மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர். சுமார் 72-க்கும் மேற்பட்டோர் இதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதோடு இந்த கோர விபத்தில் 15 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மீட்புக்குழு தற்போது வரை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். இந்த சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Also Read: காசா மீதான இறுதிக்கட்ட தாக்குதலுக்கு தயாரான இஸ்ரேல் : ரஃபாவிலிருந்து வெளியேறிய 3 லட்சம் பாலஸ்தீனியர்கள் !