India

“முழு வீடியோவையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்; அனந்த போஸ் இனியும் ஆளுநராக தொடரக்கூடாது” : மம்தா ஆவேசம்!

மேற்கு வங்க மாநிலத்தில் ஆளுநராக இருப்பவர் சி.வி.அனந்த போஸ். இவர் அம்மாநில அரசுக்கு தொடர்ந்து பல்வேறு இடையூறு கொடுத்ததன் மூலம் நாடு முழுவதும் பிரபலமானவராக அறியப்பட்டவர். இவர் மீது ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் பெண் ஒருவர் கடந்த மே 2ஆம் தேதி, ஆளுநர் மாளிகை வளாகத்தில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறையில் புகார் ஒன்றை கூறினார்.

அதனையடுத்து அந்த பெண்ணை அங்கிருந்த போலீஸார் ஹரே தெரு காவல் நிலையத்துக்கு சென்று, அங்கு அவர் முறைப்படி ஆளுநர் மீது புகார் கொடுத்தார். அந்தப்புகாரில், ஆளுநர் மாளிகையில் நிரந்தர வேலை கொடுப்பதாகக் கூறி, பல சந்தர்ப்பங்களில் தன்னை ஆளுநர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும், அருவருக்கத்தக்க விதத்தில் தன்னை தொட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், மே இரண்டாம் தேதி ஆளுநர் தன்னை மீண்டும் அழைத்ததாகவும் கூறியுள்ளார்.

அதன்படி ஆளுநரை சந்திக்க தனது சூப்பர்வைசருடன் சென்றதாகவும், சற்று நேரத்தில் ஆளுநர் சூப்பர்வைசரை அனுப்பிவிட்டு தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த விவகாரம் பெரிதாக வெடித்ததை தொடர்ந்து கொல்கத்தா போலீஸார் ஒரு குழுவை அமைத்தனர். அதேவேளையில், ஆளுநர் மாளிகைக்குள் காவல்துறையினர் அனுமதிக்க கூடாது என்று ஆளுநர் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.

அதே நேரம் ஆளுநருக்கு அரசியல் சாசன பாதுகாப்பு உள்ளதால் அவர் மீது வழக்கு தொடர போலீசார் சட்ட ஆலோசனைகளை பெற்று வருகின்றனர். மேலும் அனுமதி கிடைத்ததும் ஆளுநர் மாளிகையின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி சோதனை நடத்த கொல்கத்தா போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில், மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் மீதான பாலியல் புகார் குறித்து விசாரிக்க கொல்கத்தா காவல்துறை துணை ஆணையர் இந்திரா முகர்ஜி தலைமையில் எட்டு பேர் குழுவை கொல்கத்தா போலீஸ் அமைந்துள்ளது. இந்த குழு விரைவில் தனது விசாரணையை தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே ஆளுநர் மாளிகை பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை மறைக்காமல், சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தனது கண்ணியத்தை குறைக்கும் வகையில் ஆளுநர் வீடியோ வெளியிட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஹௌராவில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, ஆளுநர் மாளிகை வெளியிட்டது எடிட் செய்யப்பட்ட வீடியோ என்று கூறினார். தனக்குப் பென் டிரைவ் மூலம் முழு வீடியோ வந்திருப்பதாகவும் அதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

ஆனந்த போஸ் ஆளுநராக இருக்கும் வரை ஆளுநர் மாளிகைக்கு என்னை அழைத்தால் போகமாட்டேன். அவர் என்னை சந்திக்க விரும்பினால் சாலையில் வைத்து சந்திக்கலாம் என்று கூறுவேன் என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார். கடும் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள ஆளுநர் இனிமேலும் ஆளுநர் பதவியில் தொடரக்கூடாது. உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று மம்தா பானர்ஜி வலியுறுத்தினார்.

இதனிடைய ஆளுநர் மாளிகை சிசிடிவி காட்சிகள் விசாரணைக் குழுவுக்கு கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதனை போலீசார் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.

Also Read: மேற்கு வங்க ஆளுநர் மீதான பாலியல் புகார் : 8 பேர் கொண்ட குழுவை அமைத்து கொல்கத்தா போலீஸ் உத்தரவு !