India

குழந்தை திருமணத்தை தடுத்த அதிகாரிகள்... ஆத்திரத்தில் சிறுமியை கொடூரமாக கொலை செய்த இளைஞர் !

கர்நாடக மாநிலம் குடகு பகுதியை அடுத்து சூர்லாப்பி என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு 10-ம் வகுப்பு முடித்த 16 வயது சிறுமி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த சூழலில் இந்த சிறுமிக்கு அவரது குடும்பத்தினர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி அதே பகுதியில் இருக்கும் 32 வயது இளைஞர் பிரகாஷ் என்பவருக்கு திருமணம் பேசி முடித்துள்ளனர்.

இதையடுத்து இந்த திருமணத்துக்கான ஏற்பாடுகளை குடும்பத்தினர் முனைப்பு காட்டி செய்து வந்துள்ளனர். இந்த சமயத்தில் குழந்தை திருமணம் குறித்த செய்தி குழந்தை நலத்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. அதன்படி கடந்த மே 9-ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெறவிருந்த நிலையில், அதனை குழந்தை நலத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

மேலும் தற்போது 16 வயதே ஆகியிருக்கும் பெண்ணுக்கு திருமணம் செய்வது சட்டப்படி தவறு என்று அறிவுறுத்தியதோடு, இதையும் மீறி சிறுமிக்கு திருமணம் செய்துவைத்தால், அனைவர் மீதும் போக்சோ உள்ளிட்ட சட்டங்களின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடுத்தனர். இதனால் இரு குடும்பத்தினரும் மிகவும் அதிர்ச்சியில் இருந்தனர்.

அதிகாரிகளின் எச்சரிக்கையால் மிகவும் ஆத்திரமடைந்த இளைஞர் பிரகாஷ், நேராக சிறுமியின் வீட்டுக்கு சென்று, அவரது குடும்பத்தினரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார். மேலும் தந்தை, தாய் உள்ளிட்டோரை தாக்கி விட்டு, சிறுமியை அவரது வீட்டுக்கு வெளியே இழுத்து சென்று, அங்கிருந்த மரம் வெட்டும் கோடாரியால் சிறுமியின் தலையில் தாக்கி, கொலை செய்துள்ளார்.

இதில் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக்கொண்டிருந்த சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு, தப்பியோடியுள்ளார் பிரகாஷ். இதையடுத்து இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் சிறுமியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து தலைமறைவான பிரகாஷ் மீது கொலை, போக்ஸோ உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.