India

விவசாயி மரணத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை வேண்டும்: பாஜக வேட்பாளர் வீட்டை முற்றுகையிட்ட விவசாயிகள்

ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து இரு ஆண்டுகளுக்கு முன்னர் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். ஒரு வருடத்திற்கு மேலாக கடும் குளிர், மழை, தடியடி, உயிரிழப்புகள் என அனைத்தையும் தாங்கி ஒன்றிய அரசை தங்களது கோரிக்கைக்குப் பணியவைத்தார்கள் விவசாயிகள்.

அதனைத் தொடர்ந்து 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக ஒன்றிய அரசு அறிவித்தாலும், அதற்கான அறிவிப்பாணை ஒன்றிய அரசு வெளியிடவில்லை. இதனைத் தொடர்ந்து பல்வேறு விவசாய சங்கங்கள் சார்பில் மீண்டும் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி பல்வேறு மாநிலங்களில் இருந்து பாஜக அரசின் கடும் எதிர்ப்புகளை மீறி டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அதில் ஹரியானா - ஷாம்பு எல்லையில் போராட்டம் நடத்திவந்த விவசாயிகள் மீது பாஜக ஆளும் ஹரியானா மாநில போலிஸார் ரப்பர் குண்டுகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில் ஏராளமான விவசாயிகள் காயமடைந்த நிலையில், இளம் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக செயல்படவுள்ளதாக விவசாயிகள் அறிவித்தனர். அதன் விளைவாக ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினரை நுழைய விடாமல் விவசயிகள் தடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்தின் பாட்டியாலா தொகுதியின் பாஜக வேட்பாளர் பிரணீத்கவுர், ராஜ்புரா பகுதியில் பிரசாரத்துக்கு சென்றபோது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ,அப்போது பாஜகவினருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதில்சுரேந்திரபால் சிங் (45) என்ற விவசாயி சட்டென்று மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

இந்த நிலையில், விவசாயி உயிரிழப்புக்கு கண்டனம் தெரிவித்து பாஜக வேட்பாளர் பிரனீத் கவுர் வீட்டை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் விவசாயி மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த போராட்டம் பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக மாறியுள்ளது.

Also Read: மீண்டும் மீண்டும் அரசியல் சாசனத்தை குறிவைக்கும் பாஜக - ராஜஸ்தான் துணை முதல்வர் பேச்சால் சர்ச்சை !