India

நீட் வினாதாள் கசிவு - ”23 லட்சம் மாணவர்களின் கனவுகளை சிதைத்த மோடி அரசு" : ராகுல் காந்தி MP தாக்கு!

மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என ஒன்றிய அரசு அறிவித்தது முதல், மருத்துவப் படிப்புக் கனவுகள் தகர்ந்துபோய்த் தவித்து வருகிறார்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள். மருத்துவம் படிக்க தகுதி இருந்தும், நீட் தேர்வால் தங்கள் கனவு நிறைவேறாமல் போனதால் கடந்த ஆண்டுகளில் தற்கொலை ஏராளமான செய்துகொண்டுள்ளனர்.

நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழகமே கொந்தளித்தபோதும், கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தேர்வை நடத்தி வருகிறது ஒன்றிய அரசு. தமிழ்நாட்டில் தொடங்கிய இந்த நீட் எதிர்ப்பு போராட்டம் தற்போது பல்வேறு இடங்களில் எதிரொலித்து வருகிறது. பல்வேறு தரப்பில் இருந்தும் நீட் தேர்வுக்கு எதிரான மனநிலை தற்போது அதிகரித்து வருகிறது.

அதுமட்டுமின்றி ஆள்மாறாட்டம், தேர்வு நாள் வெளியாவது என தொடர்ந்து நீட் தேர்வில் ஏராளமான முறைகேடுகளும் நடைபெற்றது வருகிறது.எனினும் ஒன்றிய அரசு நீட் தேர்வை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் நீட் தேர்வில் மற்றுமொரு முறைகேடு ஒன்று நடைபெற்றுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் சவாய் மதோபூர் என்ற இடத்தில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் நடைபெற்ற நீட்தேர்வில் மாணவர்கள் தேர்வு முடியும் முன்னரே வினாத்தாளுடன் வெளியேறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து சுமார் 4 மணி அளவில் கேள்வித்தாள்கள் சமூக ஊடகங்களில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், 23 லட்சம் மாணவர்களின் கனவுகளை மோடி அரசு சிதைத்துள்ளது என காங்கிரஸ் கட்சியின் முன்னணி நிர்வாகி ராகுல் காந்தி எம்.பி விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில்,ராகுல் காந்தி எம்.பி ”நீட் தேர்வு வினாதாள் கசிவு குறித்த செய்தி 23 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் கனவுகளை சிதைத்துள்ளது. 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று கல்லூரி சேர்க்கை கனவு காணும் மாணவனாக இருந்தாலும் சரி, அரசு வேலைக்காக போராடும் நம்பிக்கைக்குரிய இளைஞனாக இருந்தாலும் சரி, மோடி அரசு அனைவருக்கும் சாபமாகிவிட்டது.

10 ஆண்டுகளாக பாஜக அரசின் கையாலாகாத்தனத்திற்கு விலை கொடுத்து தங்கள் எதிர்காலத்தை பாழாக்கி வரும் இளைஞரும், அவரது குடும்பத்தினரும் தற்போது ஆட்சியை நடத்துவதற்கும் வித்தியாசம் இருப்பதை புரிந்து கொண்டுள்ளனர்.

கடுமையான சட்டங்களை இயற்றுவதன் மூலம் கேள்வித்தாள் கசிவில் இருந்து இளைஞர்களை காங்கிரஸ் கட்சி காக்கும். மாணவர்களுக்கு ஆரோக்கியமான வெளிப்படையான சூழலுக்கு காங்கிரஸ் உத்தரவாதம் கொடுத்துள்ளது.” என தெரிவித்துள்ளார்.

Also Read: குஜராத்தில் மோடி போட்டியிடுவாரா? : விடையற்று போன பா.ஜ.க!