India

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை : ராஜஸ்தானில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள் !

மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என ஒன்றிய அரசு அறிவித்தது முதல், மருத்துவப் படிப்புக் கனவுகள் தகர்ந்துபோய்த் தவித்து வருகிறார்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள். மருத்துவம் படிக்க தகுதி இருந்தும், நீட் தேர்வால் தங்கள் கனவு நிறைவேறாமல் போனதால் ஏராளமான மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழ்நாடு முழுவதும் கொந்தளித்து கொண்டிருக்கும்போதும், கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தேர்வை நடத்தி வருகிறது ஒன்றிய அரசு. தமிழ்நாட்டில் தொடங்கிய இந்த நீட் எதிர்ப்பு போராட்டம், தற்போது பல்வேறு மாநிலங்களும் எதிரொலித்து வருகிறது. பல்வேறு தரப்பில் இருந்தும் நீட் தேர்வுக்கு எதிரான மனநிலை தற்போது அதிகரித்து வருகிறது.

நீட் தேர்வு அமலுக்கு வந்ததில் இருந்து, தனியார் பயிற்சி மையங்களில் படித்தால் மட்டுமே நீட் தேர்வில் வெற்றிபெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதால், இதனை பயன்படுத்தி தனியார் பயிற்சி மையங்கள் லட்ச கணக்கில் கட்டணத்தை உயர்த்தி வருகின்றன. மேலும், அங்கு பயிலும் மாணவர்களுக்கு அதிகப்படியான மனஉளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.

தொடர்ந்து நீட் தேர்வால் இளம் வயது மாணவர்களின் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில், இதனை ஒன்றிய பாஜக அரசு கண்டும் காணாதது போல் இருந்து வருகிறது. அண்மையில் கூட 48 மணி நேரத்தில் ராஜஸ்தானில் 2 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட நிலையில், நீட் தேர்வுக்கு முந்தைய நாளில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூர் பகுதியை சேர்ந்தவர் மணீஷ் ஜத் (Manish Jat). 18 வயதுடைய மாணவரான இவர், தனது 12-ம் வகுப்பில் அதிகளவு மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். மருத்துவம் படிக்க வேண்டும் என்ற தனது கனவை நினைவாக்குவதற்கு கடுமையாக முயற்சித்து வந்தார். அதன்படி கடந்த 2 ஆண்டுகாலமாக நீட் தேர்வுக்காக ப்ரஜ்நகர் காலனியில் தனியாக வீட்டில் வசித்து பயிற்சி பெற்று வந்தார்.

இந்த சூழலில் நேற்று (06.05.2024) நீட் தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதனை முன்னிட்டு மாணவர்கள் தங்களை தயார்படுத்தி வந்த நிலையில், மணீஷ் ஜத் தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். மறுநாள் வீடு திரைக்கதை நிலையில், வீட்டின் உரிமையாளர் ரந்திர் சிங் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மாணவர் மணீஷ் ஜத் தூக்கில் தொங்கியவாறு இருந்துள்ளார்.

இதையடுத்து இந்த விவகாரம் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்ததன்பேரில் விரைந்து வந்த அவர்கள், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீட் தேர்வுக்கு முந்தைய நாள், தோல்வி பயத்தில் மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: +2 தேர்வு முடிவுகள் : “குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !