India

பிரஜ்வல் ரேவண்ணாவை பிரதமர் மோடி எதற்காக பாதுகாத்து வருகிறார்? : ராகுல் காந்தி கேள்வி!

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய ராகுல் காந்தி,"மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கு முன்கூட்டியே தெரியும்.

இவ்விவகாரம் தொடர்பாக ஏற்கனவே உள்ளூர் பாஜக தலைவர் தேவராஜ் கவுடா, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8ஆம் தேதி கடிதம் எழுதியுள்ளதாகவும் அந்த கடிதத்தின் நகலை கையில் எடுத்து காண்பித்து ராகுல் காந்தி சுட்டிக்காட்டினார்.

அந்த கடிதத்தில், ஒரு பென்டிரைவ் முழுவதும் பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் அத்துமீறல் வீடியோக்கள் உள்ளன என்று பாஜக நிர்வாகி குறிப்பிட்டுள்ளார். ஆனால் இவ்விஷயத்தில் அமித்ஷா எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதேசமயம் நாட்டின் பிரதமர், பாலியல் குற்றச்சாட்டில் தொடர்புடையவருக்கு ஆதரவாக மக்களிடம் வாக்கு சேகரிக்கிறார் என்று ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.

பிரஜ்வல் ரேவண்ணாவை பிரதமர் மோடி எதற்காக பாதுகாத்து வருகிறார். எதற்காக அவர் மக்களிடம் வாக்கு கேட்கிறார் என்றும் ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ்விஷயத்தில் நாட்டு பெண்கள் அனைவரையும் பிரதமர் அவமதித்துள்ளார் என்றும், எனவே, பெண்களிடம் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் விவகாரம் அனைத்தையும் அறிந்த பிறகும் மோடியும், அமித் ஷாவும் அவரை நாட்டை விட்டு வெளியேற அனுமதித்தது ஏன்? எதற்காக அப்படி செய்தார்கள் என்பதை அவர்கள் விளக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.

Also Read: மேற்கு வங்க ஆளுநர் மீதான பாலியல் புகார் : 8 பேர் கொண்ட குழுவை அமைத்து கொல்கத்தா போலீஸ் உத்தரவு !