India
இந்தியப் பெருங்கடலில் பல மடங்கு அதிகரித்த வெப்பநிலை : கால நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கை !
சமீப காலமாக பருவநிலை மாற்றம் உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக குளிர் பிரதேசங்களாக அறியப்படும் ஐரோப்பிய நாடுகளில் சில மாதங்களுக்கு முன்னர் கடும் வெப்ப அலை வீசியது.
இங்கிலாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 40 முதல் 45 டிகிரி வரை வெப்பம் பதிவானதால் அங்குள்ள மக்கள் கடும் துன்பத்தை அனுபவித்தனர். பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் சில நாடுகளில் பெருமழை பெய்து கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.
அதே நேரம் பல நாடுகளில் போதிய மழை இல்லாமல் கடும் வறட்சி நிலவி வருகிறது. குறிப்பாக ஆப்ரிக்க நாடுகளில் கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை பொழியாத சூழலில் இந்தாண்டு கடும் வறட்சி நிலவி வருகிறது. இந்த கால நிலை மாற்றத்துக்கு கடலில் ஏற்படும் வெப்ப நிலை மாறுபாடே பிரதான காரணமாகப் பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்தியப் பெருங்கடலில் மேற்பரப்பு வெப்பநிலை கடந்த 40 ஆண்டில் பல மடங்கு அதிகரித்துள்ளதாக ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வு நிறுவனம் இந்திய பெருங்கடல் குறித்து கடந்த 4 ஆண்டுகளாக நடத்திய ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில். இந்தியப் பெருங்கடலில் மேற்பரப்பு வெப்பநிலை 1980-ம் ஆண்டில் 78.8 டிகிரி ஃபாரன்ஹீட்டாக இருந்த நிலையில், 2020ஆம் ஆண்டு 82 டிகிரி ஃபாரன்ஹீட்டாக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இது இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் 86 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்ட வாய்ப்புள்ளது என்றும், இதனால் மிக ஆபத்தான புயல்களும், பருவநிலை மாற்றங்களும் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.இந்திய பெருங்கடலின் வடமேற்கு மற்றும் வடகிழக்கு பகுதிகள் அதீத வெப்பநிலை அடைந்து வருவதாகவும், குறிப்பாக அரபிக்கடலை ஒட்டி இருக்கும் அரேபிய தீபகற்பம், தென்னிந்தியாவை ஒட்டி இருக்கும் வங்காள விரிகுடா ஆகிய பகுதிகளில் செயற்கையான வெப்பமாறுதல் ஏற்படுவதாகவும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பெருங்கடல் வெப்ப அலையின் தாக்கம், கடலின் மேற்பரப்பில் மட்டும் இல்லாமல், நீருக்கடியில் 2 ஆயிரத்து 500 மீட்டர் ஆழம் வரை அதன் தாக்கம் இருக்கும் என்றும் இதனால் இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள அண்டார்டிகா பனிக்கட்டிகள் பெருமளவில் உருகி கடல் மட்டம் அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!