India

5வது மாடியில் இருந்து வீசப்பட்ட பச்சிளம் குழந்தை... தாயை அதிரடியாக கைது செய்த போலீஸ் -விசாரணையில் பகீர்!

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள பணம்பிள்ளி நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இங்கு இன்று காலை நேரத்தில் பேருந்து ஓட்டுனர் ஒருவர் வந்துள்ளார். அவர் அந்த பகுதியில் கீழே கிடந்த ஒரு பிளாஸ்டிக் பையை எடுத்து திறந்து பார்த்தபோது, அதில் பிறந்த குழந்தை ஒன்று தொப்புள் கொடியுடன் இரத்த கோரத்தில் இருந்துள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனே இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், குழந்தையின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியில் அமைந்துள்ள சிசிடிவி காட்சியையும் ஆய்வு செய்தனர். அதில் அதே அடுக்குமாடி குடியிருப்பின் மாடியில் இருந்து கீழே தூக்கி எறியப்படுவது பதிவாகியிருந்தது.

இதைத்தொடர்ந்து அங்கே விசாரணை மேற்கொண்டபோது, 5வது மாடியில் உள்ள இளம்பெண் வீட்டின் கழிவறையில் இரத்த கறை இருந்துள்ளது. இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் அது அந்த இளம்பெண்ணின் குழந்தை என்றும், அதனை அவரே கொலை செய்துவிட்டு தற்கொலை செய்ய முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து அவரிடம் விரிவாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது பெற்றோருடன் வசிக்கும் அந்த 23 வயது இளம்பெண், அண்டை மாநிலத்தில் தனது படிப்பை முடித்து மேற்படிப்புக்காக கொச்சி வந்துள்ளார். இதனிடையே இவருக்கு திருச்சூரை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் சமூக வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த கர்ப்பத்துக்கு அவர்தான் காரணம் என்றும் கூறப்படுகிறது.

எனினும் இவர் கர்ப்பமுற்றது, அவரது குடும்பத்தினருக்கு குழந்தை பிறக்கும் வரை தெரியமலே இருந்துள்ளது. ஆரம்பத்தில் கர்ப்பத்தை கலைக்க முயன்ற அந்த இளம்பெண்ணின் முயற்சிகள் அனைத்தும் தோல்விடையடைந்துள்ளது.இதையடுத்து வேறு வழியின்றி அந்த குழந்தையை பெற்றுள்ளார். ஆனால் பிறந்த பிறகு எப்படி கொலை செய்வது என்று கூகுளில் தேடியுள்ளார்.

தனது கழிவறையில் மே 3-ம் தேதி அதிகாலை 5 மணியளவில் குழந்தை பிறந்துள்ளது. அப்போது குழந்தையின் அழுகுரல் கேட்டுவிட கூடாது என்று தனது துப்பாட்டாவை கொண்டு அதன் வாயில் திணித்துள்ளார். இதில் குழந்தை மூச்சுத் திணறி இறந்துள்ளது. இதையடுத்து தனது தாய், கதவை தட்டியதும், என்ன செய்வதென்று அறியாமல் ஒரு பிளாஸ்டிக் கவரில் குழந்தையின் சடலத்தை வைத்து 5வது மாடியில் இருந்து தூக்கி எறிந்துள்ளார்.

இவையனைத்தும் விசாரணையில் தெரியவந்தது. ஆனால் அந்த திருச்சூர் இளைஞர் குறித்து அந்த இளம்பெண் வாக்குமூலம் அளிக்க மறுப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அவர் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண் என்பதால், அவரது அடையாளத்தை வெளியிட காவல்துறை மறுத்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “பெண்கள் என்றால் எதை வேண்டுமானாலும் பேசலாமா ?” - சவுக்கு மீடியா சங்கருக்கு மகளிர் காங்கிரஸ் கண்டனம் !