India

வெறுப்பு பேச்சு - பிரதமர் மோடியின் வீடியோவை நீக்கிய Instagram!

ராசுஸ்தான் மாநிலத்தில் அண்மையில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் நமது சொத்துக்களை பிடிங்கி இஸ்லாமியர்களுக்கு கொடுத்து விடுவார்கள்” என மக்கள் மத்தியில் வெறுப்பை விதைக்கும் வகையில் கூறினார்.

இதையடுத்து பிரதமர் வெறுப்பு பேச்சுக்கு இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். மேலும் பிரதமர் மோடி 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்ற வழக்கும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்த பிரதமர் மோடியின் வெறுப்புப் பேச்சு தொடர்வான வீடியோ நீக்கப்பட்டுள்ளது. ஏப்.30 ஆம் தேதி பா.ஜ.க கட்சியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பான வீடியோ வெளியிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சுக்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தது. அதோடு வீடியோவை நீக்க வலியுறுத்தியும் இன்ஸ்டாகிராம் நிர்வாகத்திற்குப் புகார் கடிதங்களும் வந்துள்ளது. இந்நிலையில் மோடியின் வெறுப்பு பேச்சு குறித்த வீடியோவை தனது பக்கத்திலிருந்து இன்ஸ்டாகிராம் நிர்வாகம் நீக்கியுள்ளது.

”மோடியின் வெறுப்புப் பேச்சை இன்ஸ்டாகிராம் வலைதளம் நீக்கியிருக்கிறது. ஆனால் தேர்தல் ஆணையம் அமைதி காக்கிறது. இன்ஸ்டாகிராம் கொண்டிருக்கும் ஜனநாயகப் பண்பைக் காட்டிலும் தேர்தல் ஆணையத்தின் ஜனநாயக உணர்வு குறைவாக இருக்கும் கவலைக்குரிய இடத்தை இந்த தேர்தலில் நாம் எட்டியிருக்கிறோம்.” என - சாகேத் கோகலே எம்.பி சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

Also Read: எல்லை மீறிய மோடியின் வெறுப்பு பேச்சு: 20,000 பேர் தேர்தல் ஆணையத்தில் புகார் மனு - பரபரப்பான தேர்தல் களம்!