India

முறைகேடுக்கு வழிவகுக்கும் தேர்தல் ஆணையம்! :எச்சரிக்கும் முன்னாள் தேர்தல் ஆணையர் மற்றும் எதிர்க்கட்சிகள்!

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்களவை தேர்தல் நடைபெற்றாலும், 2024 மக்களவை தேர்தல் என்பது சர்வாதிகார விளிம்பிலிருந்து இந்திய ஜனநாயகத்தை காப்பாற்றும் தேர்தலாக அமைந்திருப்பதால், பலராலும் உற்று கவனிக்கக்கூடிய தேர்தலாக அமைந்துள்ளது.

எனவே, இதில் தேர்தல் நடத்தை விதிமுறை (Model Code of Conduct) பின்பற்றப்படுவதும், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை கவனிப்பதும் முன்னை விட தற்போது அதிகரித்துள்ளது.

எனினும், நடப்பு தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் பணிகளில் தொய்வு தொடர்வது, பல்வேறு துறை சார்ந்தவர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

அவ்வகையில், நடந்து வரும் மக்களவை தேர்தலில் முதல் இரண்டு கட்டங்கள் முடிவடைந்துள்ளது. எனினும், அதற்கான வாக்கு விகிதம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடாமல் தாமதித்து வருகிறது தேர்தல் ஆணையம்.

இதனால், கணிப்புகளை வைத்தே விகிதத்தை கணக்கிடும் நிலையும் உருவாகியுள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீத்தாராம் யெச்சூரி, “வாக்குப்பதிவின் முதல் இரு கட்ட வாக்குப்பதிவு சதவிகிதங்களை தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை. வெளியானவை தோராயமானவைதான். தேர்தல் முடிவுகளில் முறைகேடு நடப்பதற்கான சாத்தியங்களை இது உருவாக்கியிருக்கிறது” என்றும்,

இதுவரை, கண்டிப்புடன் கடைபிடிக்கப்பட்டு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகளும், இம்முறை தளர்வுடன் காணப்படுவது குறித்து, முன்னாள் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா, “தேர்தல் நடத்தை விதிகளை மீறுவோர் மீது காலம் தாழ்த்தப்படாமல் உடனடியான மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் தங்களது கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.

இவை ஒருபுறம் இருக்க, வாக்கு இயந்திரங்களில் உண்டான கோளாறு, மணிப்பூர் வாக்குச்சாவடிகளில் வெடித்த வன்முறை ஆகியவையால், வாக்காளர்களின் வாக்கு விகிதமும் கணிசமாக குறைந்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு தகவல் தொடர்புத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “தேர்தல் பணிக்காக தேர்தல் ஆணையம் ஒதுக்கும் நிதியும், நேரமும், கவனமும் போதுமானதாக இல்லை. அதன் காரணமாகவே, 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டாலும், வாக்கு விகிதம் குறைந்த அளவில் இருக்கிறது.

மக்களிடையே கூடுதல் விழுப்புணர்வுகளை கொண்டு சேர்க்க வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்திற்குரியது”
என தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர் சவுரவ் தாஸ், “மோடியின் வெறுப்பு மற்றும் பொய் பேச்சுகளை புறக்கணிக்கும் தேர்தல் ஆணைய அதிகாரிகளின் நடவடிக்கை, முதுகெலும்பற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது” என்றும் விமர்சித்துள்ளார்.

இவ்வகையான கண்டனங்கள் இந்திய குடிமக்களிடமிருந்து பெற்றது மட்டுமல்லாமல், X தளத்திடமும், கருத்துரிமைக்கு எதிராக செயல்படும் தேர்தல் ஆணையம் என்ற விமர்சனத்தை பெற்றுள்ளது.

இதனால், நடுநிலை வகிக்கக்கூடிய தேர்தல் ஆணையம், பா.ஜ.க.வின் சார்பாக செயல்படுவது போல தோற்றமளிப்பது, இந்தியாவின் ஜனநாயத்திற்கு அச்சுறுத்தலாகவும் மாறியுள்ளது.

Also Read: “தேர்தலுக்கு முன்பாக கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டது ஏன்?” : பதிலளிக்க ED-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு !