India

“எங்கள் பாதுகாப்பை சிதைக்க ஒன்றிய அரசு முயற்சி; இந்தியாவை விட்டு வெளியேற நேரிடும்”: வாட்ஸ்அப் எச்சரிக்கை!

தற்போதுள்ள இணைய உலகில், நாம் அனைத்தையும் இணையவழியாகவே பெற முடிகிறது. தகவல் பரிமாற்றம் கூட நம்மால் இணைய வழியில் எளிமையாக செய்ய முடிகிறது. அதிலும் குறிப்பாக தற்போது பேஸ்புக், வாட்சஅப், இன்ஸ்டாகிராம் என பல்வேறு தொழில்நுட்பங்கள் இருக்கிறது.

இது போன்ற செயலிகள் மூலம் வெறும் தகவல் பரிமாற்றத்துடன் நின்றுவிடாமல், வீடியோ காலிங், போட்டோ வீடியோ பகிர்தல், வாய்ஸ் காலிங் வசதிகள் உள்ளிட்டவையும் பெற்றுள்ளது. இது போன்ற செயலிகளை உலகளவில் பல கோடி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் வாட்சஅப் பிரதானமாக விளங்குகிறது.

இந்தியர்கள் மட்டுமின்றி உலக நாடுகளும் பயன்படுத்தும் ஒரு செயலியாக முன்னிலையில் இருக்கும் வாட்ஸ் அப், 'Meta' வசம் சென்ற பிறகு அடிக்கடி பல்வேறு அப்டேட்களை அள்ளிக்கொடுக்கிறது. மேலும் பல தனியுரிமை வசதிகளையும் கொண்டுவந்துள்ளது. அந்தவகையில், end to end encryption வசதியை வாட்ச அப் கொண்டுவந்தது.

ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக செயல்படும் சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சித் தலைவர்களை வேவு பார்க்கும் மோடி அரசு, தனது வேலையை வாட்ஸ் அப்பில் காட்டத்தொடங்கியது. ஏற்கனவே மோடி அரசுக்கு ஆதரவாக எக்ஸ் தளம் செயல்படுவதாக குற்றச்சாட்டு உள்ள நிலையில், புதிய ஐடி விதிமுறைகளின் படி, வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட முக்கிய சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த மோடி அரசு முயற்சிக்கிறது.

இந்நிலையில் மோடி அரசுக்கொண்டுவந்த புதிய ஐடி விதிமுறைகள் தனியுரிமைக் கொள்கைக்கு எதிராக உள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளது. வாட்ஸ் அப் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, “வாட்ஸ்அப் தகவல்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டுதான் பல கோடி மக்கள் இதனை பயன்படுத்துகிறார்கள். வாட்ஸ்அப்பில் பல மில்லியன் தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. இது பாதுகாப்பானது.

அதனை encryption செய்ய முடியாது. புதிய IT விதிமுறைகளை சுட்டிக்காட்டி, தகவல் அனுப்பிய நபருடைய விவரங்களை வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசு வலியுறுத்துகிறது. அது சாத்தியமில்லை. வாட்ஸ்அப் பயனர்களின் தனியுரிமையை பாதிக்கும் வகையில், end to end encryption-ஐ சிதைக்கும் வகையில் ஒன்றிய அரசு எங்களை கட்டுப்படுத்தினால், நாங்கள் இந்தியாவை விட்டு வெளியேற நேரிடும்.

ஒன்றிய அரசின் புதிய விதிகளால் பயனாளர்களின் விவரங்களை வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வாட்ஸ்அப் பாதுகாப்பை சிதைக்க ஒன்றிய அரசு முயற்சிக்கிறது.” என வாதிட்டுள்ளது. இதுதொடர்பாக ஒன்றிய அரசின் பதில் அடுத்த விசாரணையின் போது தெரியவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

உலகளாவிய மிகப் பெரிய நிறுவனமான வாட்ஸப் இந்தியாவில் தனியுரிமை கொள்கை சிதைக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “பொய் மூட்டைகளின் களஞ்சியமாக இருக்கிறது மோடியின் உரைகள்” : நெறி தவறிய பிரதமருக்கு முரசொலி கடும் கண்டனம்!