India

அம்பானி மகனின் திருமண நிகழ்ச்சிக்காக பணியில் அமர்த்தப்பட்ட ராணுவ வீரர்கள்: மோடி அரசின் செயலால் அதிர்ச்சி!

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகனான ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சென்க்கும் வரும் ஜூலை 12 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு கடந்த மாதம் திருமணத்துக்கு முந்தைய விழா, குஜராத் மாநிலத்தின் ஜாம் நகரில் நடத்தப்பட்டது.

இந்த விழாவுக்கு கிரிக்கெட் நட்சத்திரங்கள், திரை பிரபலங்கள், அரசியல் வாதிகள், தொழிலதிபர்கள், உலக நாடுகளின் தலைவர்கள் போன்றோர் அழைக்கப்பட்டு அவர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டனர். இந்த திருமணத்துக்காக ஜாம் நகர் விமான நிலையம், பிப்ரவரி 25 முதல் மார்ச் 5 வரை பத்து நாட்களுக்கு சர்வதேச விமான நிலையமாக ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டது.

குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் சர்தார் வல்லபாய் பட்டேல் விமான நிலையம் டோலேரா, ராஜ்காட், சூரத் ஆகிய நான்கு சர்வதேச விமான நிலையங்கள் உள்ள நிலையில், ஜாம் நகர் விமான நிலையம் சர்வதேச விமனநிலையமாக அறிவிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அங்குள்ள ஜாம் நகர் விமான நிலையத்தில் பாதுகாப்பு துறைக்கான விமான நிலையம் மட்டுமே இயங்கி வரும் நிலையில், அம்பானியின் நிகழ்ச்சிக்காக அரசு செலவில் பல புதிய வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் அம்பானியின் இந்த நிகழ்ச்சிக்காக விமான நிலையத்தை மேம்படுத்தும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளியாகியுள்ளது.

முகேஷ் அம்பானி மகனின் திருமண விழாவுக்காக சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்ட ஜாம்நகர் விமான நிலையத்துக்கு வந்த விமானங்களை விமானப்படை அதிகாரிகள் கையாண்டுள்ளனர். அதோடு மட்டுமின்றி, ஜாம்நகர் விமான நிலையத்துக்கு வரும் விருந்தினர்களுக்காக விமானப்படையினரே சாலை அமைத்து விமான நிலையத்தின் ஓடுபாதையை விரிவுபடுத்தியுள்ளனர்.

பொதுவாக விமான படையினர் ராணுவ நிகழ்ச்சிகளை தவிர அரசு நிகழ்ச்சிக்கு மட்டுமே பணியமர்த்தப்படுவர். ஆனால், ஒரு தனியார் நிகழ்ச்சிக்கு விமான படை வீரர்கள் பணியமர்த்தப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அம்பானிக்காக ராணுவத்தை மோடி அவமதித்துள்ளதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.

Also Read: இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்: ஒரே நேரத்தில் வீசப்பட்ட 300க்கும் மேற்பட்ட ஏவுகணைகள்- தொடங்கிய மற்றொரு போர்