India

இந்திய நிலங்களை தாரைவார்க்கும் ஒன்றிய பா.ஜ.க : அருணாச்சல், லடாக்கில் தொடரும் சிக்கல்கள்!

இந்தியாவின் வட எல்லை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மியான்மர், சீனா, நேபாளம், வங்காள தேசம், பூடான் ஆகிய நாடுகளுடன் பகிரப்பட்டு வருகிறது.

எனினும், இந்த எல்லைப்பகிர்வு என்பது, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் எல்லை பகிர்வு போன்று எளிமையானதல்ல. அங்கு நாடுகளுக்கிடையே பேருந்துகள் இயக்கப்படும். ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு செல்ல வேண்டும் என்றால், விசா போன்றவை தேவையுறாது.

ஆனால், அது போன்ற நடைமுறைக்கு முற்றிலும் எதிரான போக்கே, தெற்காசிய நாடுகளிடையே நிலவுகிறது. குறிப்பாக, இந்தியாவிற்கும் அதன் எல்லை நாடுகளுக்கும் இருக்கின்ற எல்லைப்பகிர்வு சிக்கல், பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், இதுவரை காக்கப்பெற்று வந்த எல்லைகளை, கடந்த 10 ஆண்டுகளில் கணிசமாக இழந்துள்ளது இந்தியா. காரணம், கடந்த 10 ஆண்டுகளில், பா.ஜ.க ஆளும் மணிப்பூர், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநில மக்களை துன்புறுத்தவே, பாதுகாப்பு படை அதிகம் பயன்படுகிறார்களே ஒழிய, எல்லைகளை காக்க அல்ல என்பதே.

இதனை, கடந்த ஆண்டு, ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் ஆளுநர், சத்ய பால் மாலிக் அளித்த பேட்டி உறுதி செய்தது. புல்வாமா தாக்குதலில், மிகப்பெரிய பாதிப்பு உண்டாக, ஒன்றிய பா.ஜ.க.வின் பங்கு பெரியது என்றும்,

பாதுகாப்பு படையினர், அவசர தேவைக்கு கேட்ட, வானூர்திகளை தர மறுத்தது. எல்லை பாதுகாப்பில் கவனக்குறைவு உள்ளிட்ட பா.ஜ.க.வின் கண்டிக்க தக்க நடைமுறைகள் பாதிப்புக்கு வித்திட்டது என்றும் முன்வைத்தார்.

அப்போதைய அளவில், அச்செய்தி பெரிதாக வெடித்திடினும், அது காலப்போக்கில் மறக்க நேரிட்டது. இந்நிலையில் எல்லை சிக்கல் மீண்டும் உச்சம் தொட தொடங்கியுள்ளது.

இந்தியாவின் பெரும்பான்மையான எல்லையை பகிர்ந்து வரும் சீனா, இந்திய பகுதிகளாக லடாக் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய இடங்கள், சீனாவிற்கு சொந்தமானது என உரிமை கொண்டாடிவருகிறது.

இதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் உள்ளிட்ட பல தலைவர்கள் கடுமையான கண்டனம் தெரிவித்திடினும், மோடியின் குரலை மட்டும் கேட்க இயலாத சூழல் நிலவுகிறது.

இந்நிலையில், அருணாச்சலத்தின் பெரும்பான்மையான இடங்களுக்கு, பெயர்மாற்றம் செய்துள்ளது சீனா. மேலும், இந்தியாவின் மாநிலம் தான் அருணாச்சலம் என அமெரிக்க அரசு கூறியதற்கும், கண்டனம் எழுப்பியுள்ளது.

கூடுதலாக, லடாக்கிலும் எல்லை பறிபோகிறது. மாநில தகுதி வேண்டும் உள்ளிட்ட பல காரணங்களை முன்வைத்து ஆயிரக்கணக்கான மக்கள் கடும் குளிரில் போராடி வருகின்றனர்.

ஆனால், அவை எவற்றையும் கண்டுகொள்ளாமல், தேர்தல் பிரச்சாரத்தில் மட்டுமே முழு கவனம் செலுத்தி வருகிறது ஒன்றிய பா.ஜ.க.

தட்டிக்கேட்க வேண்டிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், கட்சத்தீவுடன் திராவிட மாடல் அரசை தொடர்புபடுத்தி, மக்களை திசை திருப்பி வருகிறார்.

எனினும், ஜெய்சங்கர் அறிய தவறிய சில, கலைஞரின் கட்சத்தீவு நடவடிக்கைகள் பின்வருமாறு,

“1971 ஆம் ஆண்டு கச்சத்தீவு நம்முடைய அரசுரிமை என்பதற்கான ஆதாரங்களைத் திரட்டுவதற்கு சட்டப்பேராசிரியர் எஸ். கிருஷ்ணசாமிக்கு முதல்வர் கலைஞர் உத்தரவிட்டார்.

கச்சத்தீவானது இந்தியாவுக்குத்தான் சொந்தம் என்பதற்கான அறிக்கையை, 1973 டிசம்பரில் முதல்வர் கலைஞர் அவர்கள் வெளியிட்டு, அதற்கான அனைத்து ஆவணங்களையும் பிரதமரிடம் வழங்கினார்.

ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்வரன் சிங்கை முதலமைச்சர் கலைஞர் சந்தித்து, கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுப்பதற்குத் தமிழ்நாடு அரசு சம்மதிக்காது என்பதை தெளிவுபடுத்தினார்.

கச்சத்தீவு ஒப்பந்தம் கையெழுத்தான மூன்றாவது நாள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வர் கலைஞர் கூட்டி, ஒப்பந்தத்தை ரத்து செய்தாக வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பினார்.”

இத்தகைய நிலையில், மக்களின் பிடியிலிருந்து விடுபட, புதிய புதிய சிக்கல்களை உண்டாக்கும் பா.ஜ.க. நாட்டு மக்களையும் சரி, நாட்டின் நிலத்தையும் சரி, காக்க தவறி வருகிறது என்பது மக்களால் உணரப்பட்டு வருகிறது.

Also Read: மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும்: இந்து தமிழ் திசை நாளிதழுக்கு முதலமைச்சர் பேட்டி!