India
ஒன்றிய அரசுக்கு எதிராக கேரள அரசு தொடர்ந்த வழக்கு : அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு!
பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. அதிலும், தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, பஞ்சாப் போன்ற மாநில ஆளுநர்கள் பாஜகவை சேர்ந்தவர்கள் போலவே செயல்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் கேரள மாநிலத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் அரசுக்கும், ஆளுநருக்கும் இடையேயான மோதல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதுதவிர கேரளாவுக்கு ஒன்றிய அரசு போதிய அளவு நிதிவழங்கவில்லை என்றும் குற்றசாட்டை மாநில அரசு தெரிவித்து வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கேரள அரசு திட்டத்தின் பெயர் இந்தியில் வைக்க மறுத்ததால் ஒன்றிய அரசு நிதியை நிறுத்திவிட்டதாகக் கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் குற்றம் சாட்டியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
ஒன்றிய அரசு உரிய நிதியை வழங்காமல் இருந்த காரணத்தால், வெளியில் இருந்து கடன் வாங்க கேரள அரசு முயன்றது. அனுமதிக்கப்பட்ட நிதிவரம்புக்குள் கடன் வாங்கும் கேரள அரசின் இந்த முடிவுக்கும் ஒன்றிய பாஜக அரசு அனுமதி வழங்காமல் இருந்தது. இதன் காரணமாக கேரளாவுக்கு உரிய நிதி வழங்க வேண்டும், பொது வெளியில் இருந்து கடன் வாங்க அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரூ.13,600 கோடி கடன் வாங்க அனுமதி வழங்க ஒன்றிய தயாராக இருப்பதாகவும் , ஆனால், ஒன்றிய அரசுக்கு எதிரான வழக்கை கேரளா திரும்பப் பெற வேண்டும் என்று கூறினார். இதற்கு கேரள அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கேரள அரசு மற்றும் ஒன்றிய அரசு ஆகிய இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அரசியல் சாசனப் பிரிவு 293 இதுவரை நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பப்படவில்லை என்று குறிப்பிட்டனர்.
மேலும் , ஒன்றிய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையேயான நிதி விவகாரம் தொடர்பாக பிரிவு 293 ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து இந்த வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி இடைக்கால உத்தரவிட்டனர். மேலும், கேரளாவின் கடன் வாங்க அனுமதி வழங்க வேண்டும் என்ற இடைக்கால கோரிக்கையை ஒன்றிய அரசு பரிசீலிக்கும் என்று நீதிமன்றம் கருதுவதாகவும் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!