India

MGNREGA ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு என்பது, ஒரு கண்துடைப்பு நாடகம்! : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!

கடந்த 40 ஆண்டுகால பா.ஜ.க அரசியலில், வளர்ச்சி உண்டாகி இருக்கிறதோ இல்லையோ, ஏமாற்று தனங்கள் உச்சம் தொட்டுள்ளன.

மாநில அரசியலானாலும் சரி, ஒன்றிய அரசியலானாலும் சரி, பா.ஜ.க.வின் நிலைப்பாடு என்னவோ ஒன்று தான். அது மக்களிடம் நம்பிக்கையை விதைத்து, பின் அதனை செயல்படுத்தாமல் இருப்பது.

2014ஆம் ஆண்டு, இந்திய மக்கள் ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும், ரூ. 15 இலட்சம் போடப்படும் என தெரிவித்த மோடி, ஒவ்வொரு இந்தியர் பெயரிலும் ரூ. 1.5 இலட்சம் கடன் தான் வாங்கியுள்ளார்.

அவ்வகையில் தான், 2014-ல் இந்தியாவில் புதிதாக 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தெரிவித்து விட்டு, தற்போது வரலாறு காணாத வேலைவாய்ப்பின்மையையும் உருவாக்கியுள்ளார்.

எனினும், இத்தகைய வரலாறு உடைய பிரதமர் மோடியும், அவரது கட்சியும் தேர்தல் வரும் போதெல்லாம், நல்லாட்சி நடத்துவது போல நாடகமாடுவதில் மாற்றமல்ல சூழல் நிலவுகிறது.

அவ்வாறு நடத்தப்பட்டுள்ள நாடகமே, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச்சட்டத்தின் (MGNREGA) கீழ் பணிபுரிவோருக்கான ஊதிய உயர்வு.

மோடி அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து, பணவீக்கம் உச்சத்தை தொட்டுள்ளது. விலைவாசி கடுமையான வளர்ச்சி கண்டுள்ளது. ஆகையால், மக்கள் வாழ்க்கை நடத்துவதற்கு கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

அதனால், MGNREGA ஊழியர்களும், விவசாயிகளும், சிறு குறு தொழில் புரிவோரும், நாள் ஊதியம் பெறுவோரும், ஒன்றிய அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

எனினும், அப்படி எந்த போராட்டமும் நிகழாதவாறு, செயலாற்றி வந்த மோடி அரசு, தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டதும், MGNREGA ஊழியர்களுக்கு, 3 முதல் 10 விழுக்காடு ஊதிய உயர்வு அறிவித்துள்ளது.

நாள் ஒன்றுக்கு ரூ. 400 என நிர்ணயிக்கப்பட்டாலே, அது போதுமா என்கிற கேள்வி நிலவுகிற நிலையில், ஏற்கனவே வழங்கப்பட்டு வருகிற ரூ. 230 - ரூ. 280 என்கிற ஊதியத்தில் ரூ. 5 முதல் ரூ. 10 உயர்த்துவது, யாருக்கு உதவியாக இருக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நூறு நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை உயர்த்துவதாக அறிவித்திருக்கிறார்கள். மக்கள் மேல் ஏன் இந்த திடீர் கரிசனம்? பாசம்? இரக்கம்? பிரதமர் மோடி அவ்வளவு இரக்கமும் - பாசமும் உடையவர் என்றால், கிராமத்தில் வாழும் ஏழை மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கொண்டு வந்த இந்த திட்டத்தை இவ்வளவு நாள் ஏன் முடக்கி வைத்தீர்கள்?

கார்ப்பரேட்களுக்கு ரத்தினக் கம்பளம் விரிக்கும் மோடி அரசு, இரத்தம் சிந்தி உழைக்கும் ஏழைகளுக்கு, உதவியாக இருக்கும் திட்டத்தை சீரழித்து வேடிக்கை பார்த்தது. நம்முடைய தி.மு.க தேர்தல் அறிக்கையில் சொன்னதைப் பார்த்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு 294 ரூபாயிலிருந்து, 319 ரூபாயாக உயர்த்தியிருக்கிறார்கள்! அடேங்கப்பா, மக்கள் மேல் எவ்வளவு அக்கறை! அவ்வளவு அக்கறை இருக்கிறவர், இதையெல்லாம் தேர்தலுக்கு முன்னால் ஏன் செய்யவில்லை? ஏன் என்றால், இதெல்லாம் கண்துடைப்பு நாடகம்!” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மக்களுக்கு உதவிகரமாக இருக்குமா என்ற சிந்தனை கூட இல்லாமல், பா.ஜ.க தங்களின் சொந்த நலனுக்காக செயல்படுத்தியிருக்கும், இந்த நடவடிக்கை, தேர்தல் நேரத்தில் நடந்துள்ளதால், அரசியலமைப்பிற்கு எதிரானதாகவும் அமைந்துள்ளது.

எனினும், இதற்கான தக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய தேர்தல் ஆணையம் அமைதி காத்து வருகிற தன்மையால், எதிர்க்கட்சிகளின் கண்டனங்களுக்கும், மக்களின் கண்டனங்களுக்கும் இரையாகியுள்ளது.

Also Read: தேர்தல் நடத்தை விதிகளில் கவனமில்லாமல் இருக்கிறதா தேர்தல் ஆணையம்? : விசாரிக்கப்படாத பாஜகவின் நடவடிக்கைகள்!