India

தேர்தல் விதிமீறல்களில் ஈடுபடும் பா.ஜ.க : தட்டிக்கேட்கும் இடத்தில் இந்தியா கூட்டணி!

மோடி அரசு ஆட்சிக்கு வந்து, 10 ஆண்டுகள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த 10 ஆண்டுகளில், இந்திய அளவில் பணவீக்கம், வேலை இழப்புகள், தனியார்மயமாக்கல், அடக்குமுறை உள்ளிட்ட பல சிக்கல்கள் அதிகரித்திருக்கிறது.

எனினும், தேர்தலின் போது பா.ஜ.க கையாளுகிற மதவாத, பிரிவினைவாத ஆட்டங்கள், கடந்த காலங்களில் பா.ஜ.க.வின் வெற்றிக்கு வழிவகுக்கும் வகையில் இருந்திருக்கிறது.

தென் மாநிலங்களின் வாக்கு வங்கியில் ஓட்டை விழுந்திருக்கிற நிலை நீடித்தாலும், வடக்கில் பா.ஜ.க வைத்திருக்கிற வாக்கு வங்கி அச்சமூட்டுவதாய் தான் அமைந்துள்ளது.

ஆகையால், வட மாநிலங்களில் வைத்துள்ள வாக்கு வங்கியைத் தக்கவைப்பதற்காக, பல்வேறு தேர்தல் விதிமீறல்களில் ஈடுபடவும் துணிந்துள்ளது மோடி தலைமையிலான பா.ஜ.க.

அதில், முதல் விதிமீறலாக ‘விக்சிட் பாரத்’ என்ற பெயரில், மக்களின் Whatsapp-க்கு ஒன்றிய பா.ஜ.க.வின் செயல்பாடுகளை மிகைப்படுத்தும் விதத்தில், குறுஞ்செய்திகளை அனுப்பி வருகிறது தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம்.

இது ஒரு பக்கம் இருக்க, பா.ஜ.க.வின் ஆட்சி காலத்தில் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வரும் ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்’ (MGNREGA) கீழ் பணியாற்றி வருகிற மக்களின் வாக்குகளையும் கைப்பற்றும் விதமாக, ஊதிய உயர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது பா.ஜ.க.

தேர்தலுக்கு முன் பட்டியலின, சிறுபான்மையின மக்களை திரும்பிக்கூட பார்த்திடாத மோடியும், அவரது அரசும் புதிதாக மக்களின் மீது காண்பிக்கும் அன்பு! பா.ஜ.க.வின் அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே என்பது மீண்டும் ஒருமுறை தெளிவு பட்டிருக்கிறது.

இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்சித், “தேர்தல் நேரங்களில், அரசியல் தொடர்பான படங்கள், பதாகைகள் நீக்கப்பட வேண்டும் என்கிற விதிமுறை இருக்கும் நிலையில், தொடர்வண்டி, பெட்ரோல் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் மோடியின் படங்கள் நீக்கப்படாதது குறித்து, தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

இவ்வாறான தேர்தல் விதிமுறை மீறல்களில் பா.ஜ.க ஈடுபட்டு வரும் நிலையில், “இது வரை செய்த ஆட்சி, ஒரு முன்னோட்டம் தான், இனி வரும் ஆட்சி தான் முழு படம்” என்கிற மோடியின் கூற்று, பாசிச பா.ஜ.க.வின் முன்னோட்டத்தின் தாக்கத்தையே தாங்க இயலாத மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

எனினும், இந்தியா கூட்டணி மக்களிடையே விளைத்திருக்கிற நம்பிக்கை, மக்களுக்கு ஆதரவு தருவதாகவும், துணிவு தருவதாகவும் அமையப்பெற்றிருக்கிறது.

Also Read: கூட்டணி தாவல்களால், மாற்றத்தை நோக்கி, “பீகார்” : முடிவுக்கு வரும் பா.ஜ.க.வின் பிம்ப அரசியல்!