India

மணிப்பூரில் அரங்கேறும் உரிமைமீறல் : சிறும்பான்மையினரின் கருத்துகளை கேட்காமல் நிறைவேற்றப்படும் மசோதாக்கள்!

ஒரு பெரும்பான்மை சமூகம், மற்ற சிறுபான்மை சமூகங்களை எந்தெந்த முறையில் நசுக்க இயலும் என்பதற்கு ‘மணிப்பூர் கலவரம்’ ஒரு எடுத்துக்காட்டாகும்.

அவ்வகையில், மெய்தி (Meitei) என்ற பெரும்பான்மை சமூகத்தின் ஆதிக்க அதிகாரத்தால், குகி (Kuki) மற்றும் சுமி (Zomi) என்ற சிறுபான்மை இனங்கள் மிகவும் கவலைக்குரிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

எல்லைப்பகுதியில் வாழும் சிறுபான்மை இனத்தினர், இந்திய குடிமக்களே இல்லை என்று நிரூபிக்கிற அளவிற்கு, அதிகார வர்க்கத்தின் நடைமுறைகளும் வலுத்து வருகிறது.

இந்நிலையில், கலவரம் காரணமாக மணிப்பூர் சட்டமன்றமும் இயங்காமல் கிடப்பில் போடப்பட்டு வந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் கூட்டப்பட்ட சட்டமன்ற கூட்டமும், 11 நிமிடங்களே நீடித்த காரணத்தால், எவ்வித மசோதா நிறைவேற்றமும் இன்றி முடிவுக்கு வந்தது.

இவ்வாறான சூழலில், இந்திய அரசியலமைப்பு படி, 6 மாதங்களுக்கு ஒரு முறை, சட்டமன்றம் கூட்டப்படவில்லை எனில், அம்மாநில ஆட்சி கலைக்கப்பட்டு, குடியரசு தலைவர் ஆட்சி கொண்டுவரப்படும். ஆகையால், பா.ஜ.க. அரசு தங்களின் ஆட்சியை காத்துக்கொள்ள, கலவரம் அமைதியுறாத நிலையிலும் மீண்டும் சட்டமன்றத்தை கூட்டியுள்ளது.

ஆட்சி ஆதாயத்திற்காக கூட்டப்பட்ட இந்த சட்டமன்ற அமர்வில், பல்வேறு நெருக்கடி காரணமாக குகி இனத்தை சேர்ந்த எந்த உறுப்பினர்களும் இடம்பெறவில்லை.

எனினும், அது குறித்து கவலையில்லாமல், பெரும்பான்மை கொண்டு, இடங்களின் பெயர் மாற்ற மசோதா, NRC நடைமுறையை செயல்படுத்தும் நடவடிக்கை என பல அரசியல் மாறுபாடுகளை நடத்தி வருகிறது பைரன் சிங் தலைமையிலான மாநில பா.ஜ.க அரசு.

இந்த ஒடுக்குமுறை நடவடிக்கை, கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்கட்சி உறுப்பினர்கள் புறந்தள்ளப்பட்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட நிகழ்வுக்கு ஒத்த சூழலில் அமைந்துள்ளதால், பா.ஜ.க.வின் மீது இந்திய மக்கள் வைத்திருந்த குறைந்தபட்ச நம்பிக்கையும் தவிடுபுடியாகியுள்ளது.

Also Read: “மணிப்பூர், ஹத்ராஸ் சம்பவங்களின்போது எங்க இருந்தீங்க?” - மம்தா பானர்ஜி மோடிக்கு அடுக்கடுக்கான கேள்வி !