India

ஜார்க்கண்டில் ஸ்பெயின் நாட்டு பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் : இந்திய நடிகர்கள் கண்டனம் !

உலகம் முழுவதிலும் இருந்து இந்தியாவிற்கு நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அவர்கள் இந்தியாவில் இருக்கும் சிற்பக்கலைகள், கலாச்சாரங்கள், ஆடை அலங்காரங்கள் உள்ளிட்டவையை அறிந்துகொள்கின்றனர். இதனை சிலர் புகைப்படம் பிடித்தோ அல்லது வீடியோ எடுத்தோ தங்களது வலைதளங்களில் பதிவேற்றுகின்றனர்.

இப்படி இந்தியா வரும் சில பெண்களிடம் சிலர் பாலியல் ரீதியான அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஜார்கண்டில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த குற்றத்தில் ஈடுபட்ட 2 பேரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த தம்பதிகள், இரு சக்கர வாகனத்தில் ஆசியா முழுக்க சுற்றிப்பார்க்கும் விதமாக சுற்றுலா விசா எடுத்துக்கொண்டு ஆசியா வந்துள்ளனர். இதற்காக வங்கதேசத்துக்கு வந்த அந்த தம்பதியினர், பின்னர் நேபாளம் சென்றுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இந்தியா வந்து பின்னர் இங்கிருந்து ஆஸ்திரேலியா செல்ல திட்டமிட்டுள்ளனர். அதன்படி நேபாளத்தில் இருந்து பீகார் வழியாக ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு வந்துள்ளனர். அங்கு தும்கா மாவட்டத்தை அந்த தம்பதி கடந்து சென்றுள்ளனர். பின்னர் அங்கே ஒரு இடத்தில் டெண்ட் அமைத்து அங்கு தங்கியிருந்துள்ளனர்.

அப்போது இரவு நேரத்தில் அந்த தம்பதி தங்கியிருந்த இடத்துக்கு சுமார் 7 முதல் 10 பேர் வரை இருக்கும் ஒரு கும்பல் வந்துள்ளது. வந்தவர்கள் கணவரை தாக்கிவிட்டு பின்னர் அந்த பெண்ணை அங்கிருந்து இழுத்துச்சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து அந்த கும்பல் அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளது. பின்னர் அந்த பெண் மீட்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த புகாரின் பேரில் போலிஸார், 3 பேரைக் கைதுசெய்திருக்கிறது. தலைமறைவாக இருக்கும் மற்ற குற்றம்சாட்டப்பட்டவர்களைத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நடிகர் துல்கர் சல்மான் தனது இன்ஸ்டா பக்கத்தில், “இதை கேள்விப்பட்டதும் நொறுங்கிப் போனேன். நீங்கள் இருவரும் கோட்டயம் பகுதிக்கு வந்தபோது, அங்குள்ள நெருங்கிய நண்பர்கள் உங்களுக்கு விருந்தளித்திருந்தனர். இதுபோன்ற சம்பவம் எங்கும் யாருக்கும் நடக்கக் கூடாது” என்று குறிப்பிட்டு வருத்தம் தெரிவித்தார்.

தொடர்ந்து நடிகை ரிச்சா சத்தா, “வெட்கக்கேடு! இந்தியர்கள் தங்கள் வீட்டுப் பெண்களை நடத்துவது போல வெளிநாட்டைச் சேர்ந்தவர்களையும் நடத்துகின்றனர். இந்த அழுகிப் போன சமூகத்தை நினைத்தால் அவமானமாக இருக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரபல காமெடி நடிகர் விர் தாஸ், “இந்த சம்பவத்துக்கு காரணமான 7 பேரை பிடித்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இந்த வெட்கக்கேடான செயலை நாம் பொறுத்துக்கொள்ள முடியாது.” என்று குறிப்பிட்டுள்ளார். இவர்களோடு பாடகி சின்மயி உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: “தமிழ் திரையுலகை மீட்டெடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி...” - தென்னிந்திய நடிகர் சங்கம் !