India

பெங்களூரு உணவக குண்டு வெடிப்பு சம்பவம் : CCTV காட்சி வெளியிட்ட போலீஸ் - யார் அந்த மர்ம நபர் ?

கர்நாடகா மாநிலத்தில் ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகம் பிரபலமாக அறியப்படும் ஒன்றாகும். இந்த உணவகத்தின் கிளை பெங்களூருவில் உள்ள Whitefield பகுதியிலும் அமைந்துள்ளது. இந்த சூழலில் நேற்று வழக்கம்போல் இந்த உணவகம் செயல்பட்டு வந்த நிலையில், பிற்பகல் நேரத்தில் திடீரென பலத்த சத்தத்துடன் மர்ம பொருள் ஒன்று வெடித்துள்ளது.

இதனால் அந்த பகுதியே பெரும் பரபரப்பான நிலையில், போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சுமார் 10 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த வெடி சம்பவம் குறித்து விசாரணையை தொடங்கினர். விசாரணையில் வெடித்தது வெடிகுண்டுதான் என்று உறுதியானது.

இதைத்தொடர்ந்து இந்த வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் 8 சிறப்பு படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா நேற்று தெரிவித்திருந்தார். அப்போது இதுபோன்ற சம்பவம் முன்னதாக பாஜக ஆட்சியின்போது மங்களூருவில் ந்டந்துள்ளதாகவும், தற்போது பெங்களுருவில் நடந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் விரைவில் குற்றவாளி கைது செய்யப்படுவார் என்றும் கூறினார்.

இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று 4 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதோடு இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் சிசிடிவி காட்சிகளையும் வெளியிட்டு, அதில் இருக்கும் மர்ம நபருக்கும், வெடிகுண்டு சம்பவத்துக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தற்போது அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அந்த மர்ம நபருக்கு தொடர்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். அதோடு முன்னதாக மங்களூரு வெடி சம்பவத்துக்கும் பெங்களூரு வெடி சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை என்றும் கூறியுள்ளார். தற்போது போலீசார், அந்த மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: உ.பி-க்கு ரூ.25,495 கோடி... தென்மாநிலங்களுக்கு வெறும் ரூ.22,455 கோடி: ஒன்றிய அரசின் செயலால் அதிர்ச்சி !