India

காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கு முடக்கம் : காரணம் என்ன?

தேர்தல் பத்திரங்கள் ரத்து செய்யப்படுவதாக நேற்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அஜய் மக்கான் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், " இன்னும் இரண்டு வாரத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கை ஒன்றிய பா.ஜ.க அரசு முடக்கியுள்ளது.

2018-19ம் நிதி ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை 45 நாட்கள் தாமதமாக காங்கிரஸ் கட்சி சமர்ப்பிக்கப்பட்டது. இதில் தற்போது 4 வருடங்கள் தாமதமாக வருமான வரித்துறை வங்கிக் கணக்குகளை முடக்கியிருக்கிறது.

வங்கிக் கணக்கு முடக்கி இருப்பதால் காங்கிரஸ் அலுவலகம் முழுமையாக முடங்கியுள்ளது. மின் கட்டணம் செலுத்த முடியவில்லை, ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியவில்லை. ஒரே கட்சிதான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று பா.ஜ.க திட்டமிட்டு இந்த செயலை செய்துள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் ரூ.25 கோடிக்கு நிதி அளித்துள்ளனர். மேலும் ரூ.14 லட்சம் நிதியை எம்.பிக்கள் கொடுத்துள்ளனர். மக்களின் 100 ரூபாய் நிதி இதில் உள்ளது. பா.ஜ.கவை போல் பெரிய நிறுவனங்களிடம் இருந்து ரூ.6500 கோடி நிதிய காங்கிரஸ் வாங்கவில்லை.

இந்த விவகாரத்தில் நீதித்துறை தலையிட்டு ஆளும் கட்சியின் பிடியிலிருந்து ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும். வங்கி முடக்கத்தைக் கண்டித்து நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும்" என தெரிவித்துள்ளார்.

Also Read: இந்தியாவில் சூறையாடப்படும் கருத்து சுதந்திரம் : பதற்றம் நிகழும் அனைத்து பகுதிகளிலும் இணைய முடக்கம் !