India

பாஜக முன்னெடுத்த வெற்று நடவடிக்கை: அம்பலத்துக்கு வந்த உண்மை!

நவம்பர் 8, 2016 அன்று ரூ.500, ரூ.1000 ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்க செய்தது ஒன்றிய பாஜக. அந்நாளிலேயே 2000 ரூபாய் தாள்களையும் அறிமுகப்படுத்தினார் பிரதமர் மோடி.

காரணமாக, தீவிரவாதிகளின் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்துகிறோம், கறுப்புப் பணத்தை மீட்கிறோம், பொருளாதாரத்தை வளர்க்கிறோம், வங்கிகளை மேம்படுத்துகிறோம் என நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மோடி அடித்து விட்டுக் கொண்டிருந்தார்.

தேசிய அளவில் மக்கள் அனைவரும் பணப்பட்டுவாடா செய்ய இயலாமல் தவித்தனர். பலதரப்பட்ட தலைவர்களும், மக்களும் கடுமையாக விமர்சனம் செய்தனர். இந்தியப் பொருளாதாரம் கடும் பின்னடைவை அடைவதாக உலக பொருளாதார அமைப்புகள் ஆய்வுகளை வெளியிட்டன.

இத்தகைய பின்னணியில் கடந்த ஆண்டு மே 19, 2023 அன்று 2000 ரூபாய் நோட்டுகளையும், வங்கியில் திருப்பித் தரக் கோரிக்கை விடுத்தது ஒன்றிய பாஜக.

500, 1000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பை நீக்கிவிட்டு, உயர்மதிப்பு நோட்டான 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்துகையில் தீவிரவாதிகளிடம் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த முடியுமென்றும் கறுப்பு சந்தை செயல்பாட்டை முடக்க முடியுமென்றுதான் மோடியின் வாக்குறுதிகள் இருந்தன. ஆனால் அப்போதே பல பொருளாதார நிபுணர்களும் உயர்மதிப்பு நோட்டுகள், எளிதாக பணத்தை பதுக்கும் வாய்ப்பையே கொடுக்கும் என தெரிவித்தனர்.

எல்லாம் நடந்து முடிந்து 2000 ரூபாய் நோட்டுகள், 97.5% தொகை திருப்பித் தரப்பட்டுள்ளது. எனினும், நிலுவை 8,897 கோடியாக உள்ளது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், “2000 ரூபாய் நோட்டுகளின் தேவை குறைந்த அளவே உள்ள நிலை கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே அதனை வங்கிகளுக்கே திருப்பித்தருவது என முடிவெடுக்கப்பட்டது” என தெரிவித்துள்ளது.

2016-ம் ஆண்டு சந்தித்த விமர்சனங்களை தவிர்க்க, தற்போது 2000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பை நீக்கவில்லை என கடமைக்கு ஒரு செய்தியையும் வெளியிட்டுள்ளனர்.

மொத்தத்தில் பணமதிப்புநீக்க நடவடிக்கை என்ற ‘தேவையில்லாத ஆணி’யை ஏன் பாஜக முன்னெடுத்தது என்பதொரு மர்மம். அந்த மர்மத்துக்குள் பாஜகவின் நலன் மட்டுமே இருந்திருக்கும் என்பது திண்ணம்!

Also Read: 3 ஆண்டுகளாக அச்சடிக்கப்படாத 2000 ரூபாய் நோட்டு.. மோடியின் பணமதிப்பிழப்பு திட்டத்தின் அடுத்த தோல்வி !